2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிராம சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விழுமியங்களுடன் இணைந்ததாக இருக்கவேண்டும்: ரீ.மயூரன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெளியிடங்களிலிருந்து எவ்வளவோ அபிவிருத்தித்திட்டங்களை கிராமங்களினுள் திணித்தாலும், உண்மையான கிராம சமூக பொருளாதார அபிவிருத்தி என்பது கிராமத்தின் உள்ளூர் கலாசார பாரம்பரிய விழுமியங்களுடன் இணைந்ததாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

சிறுவர்  சாதனையாளர் பாராட்டு விழாவும் கலாசார பண்பாட்டு எழுச்சி நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.ரவிதேவன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சுவீடன் அபிவிருத்தி நிலையம் கடந்த 07 வருடங்களாக  தளவாய்க் கிராமத்தில் கிராம சமூக பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி செயற்பட்டு வருகின்றது.

வீடமைப்பு, வாழ்வாதார உதவிகள், இயற்கை விவசாயம், இளைஞர் அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள், பால்நிலை சமத்துவம் மது ஒழிப்பு, குடும்ப வன்முறைகள் தவிர்ப்பு, தலைமைத்துவமும் முகாமைத்துவமும், சமூக கலாசார அபிவிருத்தி, விளையாட்டு திறனாக்க செயற்பாடுகள், இடர் முகாமைத்துவம்  பெண்கள் சிறுவர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளை இலக்காகக்கொண்டு சுவீடன் அபிவிருத்தி நிலையம் செயற்பட்டு வருகின்றது.

இதன் மூலமாக பல்வேறு சாதகமான அடைவுகள் எட்டப்பட்டிருக்கின்றது. குடும்ப வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
ஆயினும், இன்னமும் இந்த அபிவிருத்திகளில் பல சாதகமான அடைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன் காரணமாகவே 05 வருடங்களுக்காக வரையறுக்கப்பட்டிருந்த தளவாய்க் கிராம அபிவிருத்தித்திட்டம் மேலும் 02 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் அபிவிருத்தித்திட்டத்தின் மூலமாக தளவாய்க்கிராம மக்கள் உச்சப் பயன் அடையவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. இது கிராம மக்களின் முழுமையான பங்குபற்றுதலுடனேயே இடம்பெற வேண்டும். ஒருபோதும் வெளியிடங்களிலிருந்து திணிக்கப்படும் திட்டங்களால் கிராமங்கள் அபிவிருத்தி அடையப் போவதில்லை.

கடலோர வளங்களை அதிகம் பெற்றுள்ள தளவாய்க் கிராமம் துரித வளர்ச்சி காண்பதற்கு அதிக சாதகங்கள் உள்ளன. இந்த வாய்ப்பை கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மாணவர் சமுதாயம் தங்களது பாடசாலைக் கல்விக்குப்  பயன்படுத்தி பின்னர் இத்தகைய வளங்களை கிராமிய கலாசார பண்பாடுகளுக்கு ஊடாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் புலமை காட்டிய மாணவ மாணவியர்க்கு பரிசுகளும் கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தளவாய் வளர்பிறை வீடமைப்பு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ரீ.சிவராசா, உதவும் கரங்கள் நிறுவனப் பணிப்பாளர் ஏ.ஞானம், கிராம சேவகர் ஜி.ஜெயகாந்த் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X