2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நகரமயமாக்கல், இயந்திரமயமாக்கலினால் முதியோர்கள் கைவிடப்படுகின்றனர்: குணநாதன்

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


நகரமயமாக்கல், இயந்திரமயமாக்கல் காரணமாக, நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுகின்றனர். நீண்ட அனுபவமுடைய முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. குணநாதன் தெரிவித்தார்.

சர்வதேச முதியோர் வாரத்தையொட்டி, ஆக்கத்திறன் மற்றும் பொது அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (31) மாலை, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 30,000 வயோதிபர்கள் உள்ளனர். நகரில் 4 முதியோர் இல்லங்கள் உள்ளன. இவற்றில், 120 வயோதிபர்கள் பராமரிக்கப்படுகின்றனர். முதியோர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக, தேசிய செயலகம், தேசிய சபை மற்றும் கொழும்பில் மாத்திரம் இயங்கும் முதியோர் பராமரிப்புச் சபை என்பன உள்ளன.

கூட்டுக்குடும்பம் முறிந்து தனிக்குடும்பம் ஆனதால் முதியோரை பராமரிக்க முடியாமல் போனது. முன்பெல்லாம் கூட்டக்குடும்பத்துடன் முதியோர்கள் வாழ்ந்தனர். தற்போது அந்த நிலை அரிதாகக் காணப்படுகின்றது. இது எமக்கு பாரிய பழுவையும் வீண் செலவையும் ஏற்படுத்துகின்றது.

கூட்டுக்குடும்பத்தில் சிறுவர்களுக்கு ஒரு நோய் வரும் போது முதியோர்களின் அனுபவத்தால், வீட்டில் கிடைக்கக்கூடிய முகிலிகள் மற்றும் உணவுக்கு மணம் சேர்க்கும் பொருட்களைக் கொண்டு, கைமருந்து மூலம் தொற்றுக்களால் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு வைத்தியம் செய்தனர்.
முதியவர்கள் இல்லாமல் திருமணத்தின் பின்பு தனிக்குடித்தனம் சென்றதால் சிறிய நோய்களுக்கெல்லாம் வைத்தியசாலையை நாட வேண்டியுள்ளது. இது ஒரு மனவருத்தத்துக்குறிய விடயமாகும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று, ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுப் பற்று ஆகிய 5 பிரதேசப் பிரிவுகளிலுள்ள வயோதிபர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X