2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மாணவர்களின் கல்வியை நாடகங்கள் வீணடிக்கின்றன'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களின்  கல்வியை வீணடிப்பதாகவும் இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெற்றோர் எனவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலய  மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (03) வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள்.  அவர்களை உயர்நிலைக்கு கொண்டுவருவது அனைவரதும் கடமையாகும்.  தற்போது, அநேகமான மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களையே  பார்க்கின்றனர்.  பெற்றோர் மாலை 06 மணிக்கு தொலைக்காட்சியை போட்டால்,  இரவு 10, 11 மணிவரையும்  தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர். இதையே  பிள்ளைகளும் செய்கின்றனர். இதனால், பிள்ளைக்கு கல்வியில்; பற்று குறைகின்றது. நாடகத்தில் பற்றுக் கூடுகின்றது.

தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களை வீணடிக்கின்றன. இதன் விளைவு பரீட்சைகளில் தெரிகின்றது. இதைவிடுத்து, கல்விக்காக மாணவர்களை ஈடுபடுத்தி சிறந்த கல்விமான்களாக  உருவாக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்.

பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்க ஆயத்தமாக இருக்கின்றனர். பாடசாலைகளும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதற்கு தயாராகிவிட்டன. ஆகவே, மாணவர்களும் போட்டியிட வேண்டியவர்களாக உள்ளனர். இதற்காக பிள்ளைகளை தயார்படுத்துவதற்கு பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா.சிறிநேசன், எஸ்.மகேந்திரகுமார், கே.கரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜ், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.மாணிக்கப்போடி, ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பே.குமாரலிங்கம், மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மக்கள் வங்கி முகாமையாளர் இ.மோகனதாஸ், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X