2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உரிமைப் பிரச்சினையை எந்த அரசாங்கமும் தீர்த்துவைக்காது: பிரபா கணேசன்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'எமது மக்களின் உரிமைப் பிரச்சினையை எந்தவொரு அரசாங்கமும் தாமாக முன்வந்து தீர்த்துவைக்காது என்பது எமக்கு நன்றாகத் தெரியும்' இவ்வாறு  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பாடசாலைகளில் கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பமாகியது.  இந்த நிலையில், ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற  நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நகரப்புற மாணவர்கள் அனுபவிக்கும் தகவல் தொழில்நுட்ப வசதி, கிராமப்புற மாணவர்களுக்கும் எட்டவேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையிலேயே இன்று இந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை அனுபவிப்பதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

யுத்த காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் மிகவும் பின்தங்கியிருந்தது. யுத்தம் முடிந்து கடந்த ஐந்து, ஆறு வருடகாலத்தில்  நாட்டின் பல பாகங்களிலும் பலவித அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இவ்வாறான  அபிவிருத்திகளின் பலாபலன்களை தமிழ்ச் சமூகமும் அனுபவிக்கவேண்டும்.

உங்களின் பிரதேசத்திலிருந்து மாகாணசபையையோ அல்லது நாடாளுமன்றத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், உங்களுக்கான அபிவிருத்திகளை செய்யத் தவறுவார்களேயானால், அது தமிழ்ச் சமூகத்துக்குச் செய்த துரோகமாக இருப்பதுடன், வரலாற்றிலும் அவர்களுக்கு சிறந்த இடமிருக்காது.

யுத்தம் முடிவடைந்தபோதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை. இதை கசப்பான விடயமாக நான் பார்க்கின்றேன். ஆயுத ரீதியான போராட்டம் துரதிர்ஷ்டவசமாக அது தோல்வியில் முடிந்தது.   ஆனால், இப்பொழுது எமது போராட்டம் கல்வியுடன்  இணைந்த அறிவார்ந்த போராட்டமாக இருக்கவேண்டும்.

30 வருடங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்த கல்விமான்களை கவனித்துப் பார்த்தால்,  அவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாகவே கொடிகட்டிப் பறந்தார்கள். அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் என்று எல்லோருமே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  ஆனால், இப்பொழுது தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்களை தேடவேண்டியுள்ளது.

அபிவிருத்தி ஒரு மாயை என்று கூறுகின்ற தமிழ் அரசியல்வாதிகள், அதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று கூறுகின்றனர். இது அறிவீனமான நிலைப்பாடு. எமது கற்பனை நிலைப்பாடுகளை விட்டு விட்டு யதார்த்தத்துடன் நாம் விவாதிக்கவேண்டும். குறைந்தபட்சம் இந்தப் பகுதியிலுள்ள மாணவர்களின் கல்வியையாவது முன்னேற்றுமாறு நான் இந்த அபிவிருத்தியை புறந்தள்ளும் தமிழ் அரசியல்வாதிகளை பார்த்துக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது 12 வருடகால அரசியல் வாழ்க்கையில், நான் வீதியை அமைத்ததும் இல்லை. வீடு கட்டிக் கொடுக்கவும் இல்லை. தையல் இயந்திரங்களை கொடுத்து உதவவும் இல்லை. 100 வீதம் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியை பாடசாலைகளுக்கு செலவு செய்திருக்கின்றேன்.

தமிழ் மக்கள் இன்னுமொரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால், எமது பிள்ளைகளுக்கு சரியான கல்வி அறிவு ஊட்ட வேண்டும்.  கல்வி அறிவுக்கூடாகவே எமது போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். சமகாலத் தேவை இதுவாகவே உள்ளது.  கல்வி அறிவு ஊடாக விவாதித்தே  எமது உரிமைப் போராட்ட இலக்கை அடையவேண்டியுள்ளது. இப்படியொரு சூழ்நிலையிலேயே எமது சமூகம் இருந்துகொண்டிருக்கின்றது.

நாட்டின் நாலாபுறங்களும் அபிவிருத்தி அடைந்து வரும்போது,  எங்களுக்கு உரிமை மாத்திரமே வேண்டும் வேறெதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று புறக்கணித்திருந்து விட்டால், எமது பகுதிகள் பாழடைந்து போய்விடும்.

அபிவிருத்தியும் உரிமையும் புகையிரதத் தண்டவாளங்களைப் போன்று சமாந்தரமாகச் செல்ல வேண்டும். ஒன்று முன்னே ஒன்று பின்னே சென்றால், அது வெற்றி அடையாது. ஆகவே, அபிவிருத்தியுடன் இந்த உரிமைகளை நாம் பெறவேண்டும்.

இந்த அரசாங்கத்தை மாற்றுவதால் மட்டும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அரசாங்கம் மாறுவதால் தமிழ் மக்களுக்குப் பிரயோசனம் இல்லை. இருக்கும் அரசாங்கத்திடமிருந்து அறிவு பூர்வமாகக் கேட்டுத் தட்டிப்பறித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். வெறுமனே வீரவசனங்களை மாத்திரம் பேசிவிட்டு, எங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை என்று உட்கார்ந்திருப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.

உரிமைக் கோஷம் எழுப்புபவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்வதில்லை என்ற உண்மையை நான் கண்டுகொண்டிருப்பவன்.
எமது தமிழ்ச் சமூகச் சிறார்களின் எதிர்காலம் கல்வி அபிவிருத்திக்கூடாகவே கட்டி எழுப்பப்படவேண்டும். அந்த நிலைமை உருவாகுமாக இருந்தால் நாம் அமைச்சர்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ மண்டியிடத் தேவை இல்லை.  சரியான கல்விக்கு ஊடாக அபிவிருத்தியையும் உரிமைகளையும் இலகுவாக வென்றெடுக்க முடியும்.' என்றார்.

கிரான் ரமண மகரிஷி வித்தியாலயம், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயம், காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம், ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம், திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்;, பிறைந்துரைச்சேனை வித்தியாலயம், தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம்  ஆகியவற்றில் கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் பிரதியமைச்சர் பிரபா கணேசனால் திறந்து வைக்கப்பட்டன.

மங்களகம மங்களராமய வித்தியாலயம், ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம், 40ஆம் வட்டை விபுலாநந்தா வித்தியாலயம், வெல்லாவெளி-சின்னவத்தை அரசினர் வித்தியாலயம், ஆனைகட்டியவெளி வித்தியாலயம், மண்டூர் 13ஆம் கொலனி விக்னேஸ்வரா வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயம்;, சின்னவத்தை சிறி பந்தராம வகாரஸ்தானய ஆகியவற்றில் நாளை 05ஆம் திகதி கணினி விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X