2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்குப் பல்கலையில் மோதல்: எட்டு மாணவர்கள் காயம்

Thipaan   / 2014 நவம்பர் 04 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே இன்று(04) ஏற்பட்ட மோதலில், எட்டு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பிரிவு மாணவர்களுக்கும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மட்டக்களப்பிலிருந்து கலகத் தடுப்புப் பொலிஸார், இன்று  (04)பிற்பகல் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு (03) இரு நண்பர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதாலேயே இம் மோதல் ஏற்படும் நிலை உருவாகியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மோதலின்போது காயமடைந்த விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 4 மாணவர்களும் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த 4 மாணவர்களும் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தகப் பிரிவு இரண்டாமாண்டைச் சேர்ந்த ஆர்.கே. இஷார இம்மன (பொலன்னறுவை), ஜே.எம்.ஜி. டில்ஷாந்த் முஹாந்திர (றக்குவானை), எஸ். சிவாகரன் (நமுனுகுல), வர்த்தக பீடத்தின் இறுதியாண்டு மாணவன் நலின் பிரியங்கார (புத்தளம்) மற்றும் விஞ்ஞானப் பிரிவின் இரண்டாமாண்டு மாணவர்களான கே.எம்.பி. சம்பத் குலசேகர (மாத்தளை), ஏ.ஏ. ஹர்ஷ மதுஷாந்த் (குருவிற்ற), டி.எஸ். ஜினேந்திரா (ரண்வில்ல) மற்றும் விஞ்ஞானப் பிரிவின் இறுதியாண்டு மாணவனான கே.பி. நிஷாந்த (குருவிற்ற) ஆகியோரே தாக்குதலில் காயமடைந்து செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே நிலைமை சுமூகமாகும் வரை வர்த்தக பீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் மீண்டும் எதிர்வரும் ஞாயிறன்று பல்கலைக்கழக கற்கைகளுக்கு திரும்பி வருமாறும் (09)அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளி பிரதேச மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்காக, பொலன்னறுவை வரை தாங்கள் வழித்துணைப் பாதுகாப்பை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்ய ஒப்புக் கொண்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X