2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அரசை விமர்சித்துக்கொண்டு ஒதுங்கினால் அபிவிருத்தியில் பின்னிற்க வேண்டும்: பிரபா கணேசன்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அரசாங்கத்தை வெறுமனே விமர்சனம் செய்துகொண்டு ஒதுங்கியிருந்துகொண்டிருந்தால்,  அபிவிருத்தியில் பின்னிற்க வேண்டி ஏற்படும் என்று தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் கணினி ஆய்வுகூடத்தை இன்று புதன்கிழமை (05) திறந்துவைத்து, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கலாம். ஆய்வுகூடங்களை கட்டிக்கொடுக்கலாம். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யலாம். இவ்வாறு பல வளங்களையும் ஏற்படுத்திக்கொடுக்கலாம். ஆனால், மாணவர்களுக்கு பெறுபேறுகளை ஒருபோதும் எங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது.

இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்குவதில் நாம் மனதார மகிழ்ச்சியடைகின்றோம். சரியான பாடசாலைகளுக்கு வளங்கள் கிடைத்துள்ளது என்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  'மஹிந்த சிந்தனை' ஊடாக நகரங்களுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற தகவல் தொழில்நுட்பம்,  கிராம மட்டத்துக்கும்  வந்துள்ளது. வேறு எந்த ஜனாதிபதியும் இவ்வாறான சிந்தனையை கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதியின் சிந்தனையை செயல் வடிவமாக எமது அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய,  இன, மத பேதமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் செய்து கொடுக்கின்றார்.

இதுவரை வழங்கப்பட்ட கணினி  ஆய்வுகூடங்களில் 85 சதவீதமான ஆய்வுகூடங்கள் பெரும்பான்மைச் சமூகத்துக்குச் சென்றுள்ளன.
தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்த எவரும் என்னிடம் ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கவில்லை. அவ்வாறிருந்தால், இவ்வாறான தவறு நடந்திருக்காது. எனினும், 2015ஆம் ஆண்டு அமைக்கப்படவுள்ள கணினி  ஆய்வுகூடங்களில் 40 சதவீதமானவை தமிழ் பேசும் சமூகத்துக்கு வழங்குங்கள் என்று எமது அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய என்னிடம் கூறினார்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது எனனவென்றால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இவ்வாறான விடயங்களில் கவனமாக இருந்து பெறமுடியுமானவற்றை பெறவேண்டும். பெரும்பான்மையினர் தானாக வந்து எங்களுக்கு தருவார்கள் என்றிருந்தால் அது நடக்காது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கேட்டுப் பெறவேண்டும். தட்டிக்கேட்டு அவற்றை பெற்று எமது சமூகத்துக்கு கொடுக்கவேண்டும். இதையே நான் செய்துகொண்டிருக்கின்றேன். அரசாங்கத்தை வெறுமனே விமர்சனம் செய்துகொண்டு, ஒதுங்கியிருந்துகொண்டிருந்தால் அபிவிருத்தியில் நாம் பின்னிற்க வேண்டி ஏற்படும். எமது உரிமைகளையும் அபிவிருத்திகளையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சிறந்த முன்னேற்றம் குறித்தும் பெற்றுவரும் சிறந்த கல்வி பெறுபேறுகள் குறித்தும் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக எனது பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

எதிர்வரும் 2015ஆம் ஆண்டில் எமது அமைச்சால் தொழில்நுட்ப உபகரணங்கள் சிலவற்றை பாசடாலைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்' என்றார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வை, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்,  பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X