2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'த.தே.கூ. ஒத்துழைத்திருந்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கும்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுவார்களாக இருந்திருந்தால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் ஏற்கெனவே அபிவிருத்தி அடைந்திருக்கும் என  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்; கிளைக் காரியாலயம் ஏறாவூர், ஐயங்கேணிக்கிராமத்தில் இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'காலங்காலமாக நீங்கள் வாக்களித்து, இங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கின்றீர்கள்.  ஆனால்,  நீங்கள் அனுப்பிவைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், நாடாளுமன்றம் சென்று அங்கு அரச எதிர் நிலைப்பாடு எடுத்து அரசாங்கத்தையும் எதிரியாகவே மக்களுக்கு காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இதனால், ஆன பயன் எதுவுமில்லை.

மேலும், கல்குடாத்தொகுதியிலுள்ள 380 கிராமங்களுக்குமாக 121 கட்சிக் கிளைக் காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

எனது அபிவிருத்தித் திட்டப் பட்டியலில்  ஐயங்கேணிக்கே  முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால், ஐயங்கேணி மக்கள் கடந்தகால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதுடன், சகல மட்டங்களிலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் 100 இலட்சம் ரூபாய் நிதியில், ஐயங்கேணி கிராம  மக்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமையளிக்கப்படும். ஏற்கெனவே நாம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் ஆரம்பித்துள்ளோம்.

கல்குடாத்தொகுதியில் கடந்த 50 வருடங்களாக திருத்தப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்த வீதிகளை இப்பொழுது நாம் செப்பணிட்டுக்கொண்டிருக்கின்றோம்.  புறந்தள்ளப்பட்டுக் கிடந்த  ஐயங்கேணிக் கிராமம், இப்பொழுது ஜனாதிபதி செயலகம்வரை கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஒரு சில தினங்களில் ஐயங்கேணியிலுள்ள உள்வீதிகள் செப்பணிடப்படும். வீடற்றவர்களின் பிரச்சினையும் தீர்த்துவைக்கப்படும்.

இந்தக் கிராமத்துக்கு மத்திய அரசின் அமைச்சர்களும் வரவுள்ளார்கள். அவர்கள் இங்கு வந்து உங்கள் வாழ்க்கை நிலைமைகளை கண்கூடாகக் கண்டுகொள்வார்கள். அப்போது உங்களது தேவைகளையும் பிரச்சினைகளையும் இலகுவாகத் தீர்க்க வழியேற்படும்.

பெரும்பான்மை மக்களின் பிரதேசம் பாரிய அபிவிருத்திகளைக் கண்டுகொண்டுபோகும்போது, எமது பிரதேசங்கள் மாத்திரம் பின்னடைந்து கிடக்கின்றன' என்றார்.

ஐயங்கேணி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவரும் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருமான வி.ஜெயகணேஸின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கல்குடாத்தொகுதி மத்திய கிளைச் செயலாளர் ஐ.லலீந்திரன், வாழைச்சேனை கிளைத் தலைவர் எஸ்.மகாதேவன், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X