2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்த அரசை நல்லதென நான் கூறியதில்லை: பிரபா கணேசன்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இந்த அரசாங்கதை நல்லது என்று தான் கூறியதுமில்லை.  கூறப்போவதுமில்லை. இதற்கு பயப்படமாட்டேன் என்பதுடன், வெட்கப்படவும் மாட்டேன் என தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்திடமிருந்து தமது மக்களுக்கு தேவையானவற்றை எவ்வாறு தட்டிக்கேட்கலாம் என்ற யுக்தி தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்த அவர்,  இதை ஏன் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது எனவும் கேள்வியெழுப்பினார். 

போரதீவு கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட  மண்டூர் - 13 விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று  புதன்கிழமை (05) 45 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணினி ஆய்வுகூடத்தை திறந்துவைத்து  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வெறுமனே தமிழ் வீரவசனங்களை பேசிவிட்டும் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விட்டும்,  அவர்களது தொகுதியில் இல்லாமல் கொழும்பிலிருந்துகொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்தும், அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் நாடாளுமன்ற சிற்றூண்டிச்சாலையில் மணித்தியாலக்கணக்காக உட்கார்ந்துகொண்டு நேரத்தை கழிக்கின்றார்கள் இங்குள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களை நாடாளுமன்றத்தினுள் பார்க்கமுடியாது. வெளியிலேயே காணமுடியும். தமிழ் மக்கள் வாக்களித்த அந்த தமிழ் அரசியல்வாதிகள் என்பதை இங்குள்ள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே  உண்மை.

மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'மஹிந்த சிந்தனை' ஊடாக கிராமப்புற பாடசாலைகளை விருத்திசெய்யும் நோக்கில் கணினி ஆய்வுகூடங்களை அமைத்துவருகின்றார். இதை எமது அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய அனைத்து மாவட்டங்களுக்கும் இன, மத வேறுபாடின்றி முன்னெடுத்துச் செல்கிறார். கணினி ஆய்வுகூடங்கள் அமைப்பதற்காக  மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டும் 630 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், மக்களுக்காக வேண்டி கட்டடங்களை கட்டிக்கொடுக்கலாம், தளபாடங்களை பெற்றுக்கொடுக்கலாம். எதை  வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். பிள்ளைகளின் பெறுபேறுகளே பாடசாலையின் ஊன்றுகோலாக அமைகின்றன. ஆனால்,  பெறுபேறுகளை எங்களால் பெற்றுக்கொடுக்கமுடியாது.

இதை  அதிபர், ஆசிரியர்களே எமது தமிழ்ச் சமூகத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில், எமது சமூகத்தின் எழுச்சிக்கு ஆசிரியர்களே பாடுபடுகின்றார்கள். அரசியல்வாதிகளால் செய்துகொடுக்க முடியாததை ஆசிரியர் சமூகத்தால் செய்துகொடுக்க முடியும்.

எனது 12 வருடகால அரசியல் வாழ்க்கையில், கொழும்பு மாவட்டத்தில்  வீதிகள் உட்பட ஏனையவற்றுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அனைத்தும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் கல்விச் சமூகத்துக்காகவே செலவு செய்கின்றேன். அரசாங்கத்திடம் சண்டையிட்டு கடந்த 4 வருடங்களில் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதியைப்  பெற்று, கொழும்பிலுள்ள பாடசாலைகளின்  அபிவிருத்திக்கு செலவு செய்துள்ளேன்;. இந்த நிலைமை மட்டக்களப்பிலும் வரவேண்டும்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள மாணவர்களை விட, வடக்கு, கிழக்கிலுள்ள மாணவர்கள் கல்வியில் திறமையானவர்கள். யுத்த காலத்துக்கு முன்னர் வட, கிழக்கிலிருந்தே  டாக்டர்கள், பொறியியலாளர்கள், அதிபர்கள், அமைச்சின்  செயலாளர்கள் உட்பட பெரும்பாலான அரச திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளாக இருந்துள்ளார்கள். ஆனால், அந்த கல்விமான்கள் யுத்தத்துக்குப் பின்னர் இல்லை. எங்;கே போனார்கள். தற்போது திறமையான தமிழ் அதிகாரிகள் மிக மிக குறைவாகவே உள்ளார்கள். காரணம் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.  எனவே, மீண்டும் தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பவேண்டும்.

கொழும்பு மாவட்டத்தில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்துகொண்டு அங்குள்ள 3 தேசிய பாடசாலைகளையும் 43 மாகாணப் பாடசாலைகளையும் என்னால் அபிவிருத்தி செய்யமுடியுமாயின், ஏன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் இங்குள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்யமுடியாது.

ஆட்சி மாற்றம் எமக்கு முக்கியமில்லை. எமது மக்களின் அபிவிருத்தியும் உரிமையுமே முக்கியமாகும். ஆனால், இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி வேண்டாம் என்கிறார்கள். 10 வருடகாலமாக உரிமையை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  அபிவிருத்தியையும் உரிமையையும் ஒரேநேரத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் 50 இலட்சம் ரூபாய் நிதி, முற்றுமுழுதாக இங்குள்ள மக்களுக்கு பயன்படாமல் குறிப்பிட்டளவு பணம் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்கின்றது. இது உண்மை. இதற்குரிய ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வட, கிழக்கு தமிழ் மாணவர்கள் கல்வியில் எழுச்சி பெறவேண்டும் என்ற சிந்தனை இல்லை. பாடசாலைகளை பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

வடமாகாணசபையின் கீழ் இயங்குகின்ற பாடசாலைகளை கூட, வடமாகாணசபை கவனிப்பதில்லை, அதுபோன்றே கிழக்கு மாகாணசபையும். இந்த மாற்றத்தை  மக்கள் அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே, மாற்றத்தை மக்கள் கொண்டுவரவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X