2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மூன்றாவது தடவையும் போட்டியிட நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது: ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட முடியுமென நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் உபகரணங்களை வெள்ளிக்கிழமை (07) வழங்கி வைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னுமொரு தடவை தேர்தலில் போட்டியிட முடியுமா என்று சிலர் கேட்கின்றனர். அது இன்று உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அது தொடர்பான தீர்மானத்தை உயர் நீதிமன்றம் தரும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் தலைமைத்துவத்தை ஏற்று இந்த நாட்டை உறுதியான நாடாக கட்டியெழுப்புவதற்கான சகல பணிகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

யுத்தத்திலிருந்து மீண்டு பௌதீக வளத்தை கட்டியெழுப்பிய நமக்கு இந்த நாட்டின் வறுமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது மிகப் பெரிய சவாலாகும்.

கடந்த 30 வருடங்கள் யுத்தத்திலிருந்தோம். யுத்தம் யுத்தம் என்று அனைத்தையும் யுத்தத்துக்கே செலவு செய்யப்பட்டது. யுத்தத்தினால் நாடே அழிந்து போயிருந்தது. நாட்டின் வருமானத்தில் மிக கூடுதலான நிதியை யுத்தத்துக்கே செலவு செய்யப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஐந்தாண்டு காலம் யுத்தத்தினால் அழிந்த வீதிகளை நிர்மாணிப்பதிலும் பாலங்களை நிர்மானிக்கவும் வைத்தியசாலைகள், பாடசாலைகளை நிர்மானிக்கவும் ஏனைய பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யவுமே செலவு செய்தார்.

தற்போது 2015ஆம் ஆண்டுக்கு சமர்ப்பித்துள்ள வரவு-செலவுதிட்டம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் திட்டமாகும். ஜனவரி மாதம் தொடக்கம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலான பல வேலைத்திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் மூன்றாண்டுகளில் இந்த அரசாங்கத்தின் மொத்த வருமானமும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்காகவே செலவு செய்யப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதை நோக்கியே நாட்டை நகர்த்தவுள்ளார். அந்தப் பொறுப்பு எமது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டை ஆறு வலயங்களாக பிரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், அரசியல் பலமுள்ள ஒரு ஜனாதிபதியும் அரசியல் பலமுள்ள ஒரு நாடாளுமன்றமும் இருக்கவேண்டும்.

அடிக்கடி நாடாளுமன்றத்தை மாற்றி ஜனாதிபதியை மாற்றினால், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இன்று எமக்கு உறுதியான தலைமைத்துவமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார். இந்த நாட்டில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் இருக்கின்றது.

சிறுபான்மை சமூகம் கவனமாக சிந்தித்து செயற்பட வேண்டும். நமது சமூகத்துக்கு சிறப்பான வழியை காட்ட வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. அந்த பொறுப்பை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது 82 பேருக்கு தலா ஒருவருக்கு 32,000 ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X