2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யுவதி கடத்தல்: சந்தேக நபர் கைது

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி கிராமத்திலிருந்து கடந்த 22.09.2014 அன்று கந்தசாமி நிரோஜினி (வயது 20) என்ற யுவதி காணாமல் போயிருந்தார்.

இந்த யுவதியின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவராகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபரைத் தாம் நேற்று வெள்ளிக்கிழமை 14.11.2014 கைது செய்திருப்பதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகள் காணாமல் போயுள்ளதாக யுவதியின் தாய் கந்தசாமி தங்கநாயகம், வாகரைப் பொலிஸில் கடந்த 01.10.2014 அன்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

செப்டெம்பர் 22 ஆம் திகதி, அடகு வைத்துள்ள மோதிரம் ஒன்றை அடகு மீட்பதற்காக வாகரை மக்கள் வங்கிக்குச் சென்ற தனது மகள் வரை வீடு திரும்பவில்லை என்று தாய் கந்தசாமி தங்கநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, தனது மகள் காணாமல்போன பின்னர் ஆறு அலைபேசி இலக்கங்களில் இருந்து நபர்கள் தொடர்பு கொண்டு தெளிவற்ற முறையில் பேசுவதாகவும் காணமல்போன யுவதின் தாய் கூறினார். 

அந்த இலக்கங்களில் உள்ள ஒரு நபர் தொடர்ந்து அலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி காணமல்போன யுவதியின் சித்தியுடன் (தாயின் இளைய சகோதரி) பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாது தான் மட்டக்களப்புக்கு வந்து விடுதியொன்றில் அறை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அதில் உல்லாசமாகத் தங்கியிருக்க வருமாறும் அழைத்துள்ளார்.

அதனடிப்படையில் காணாமல் போன யுவதியின் சித்தி தான் அந்த நபர் கூறியவாறு அறையில் தங்க வருவதாகக் கூறிவிட்டு நேற்று முன்தினம் இந்த விடயத்தை வாகரைப் பொலிஸுக்கும் அறிவித்து விட்டு மட்டக்களப்பு பொலிஸுக்கும் அறிவித்துவிட்டு தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த நபர் இந்தப் பெண்ணை நெருங்கிய போது உடனிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பந்தப்பட்ட நபரை சாதுரியமாக மடக்கிப் பிடித்து கைது செய்ததாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை வாகரைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X