2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுகபோக வாழ்க்கைக்காக பணமும் உழைப்பும் சுரண்டப்படுவதை அனுமதிக்கமுடியாது: அப்துர்ரஹ்மான்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கைக்காக பொதுமக்களின் பணமும் உழைப்பும் சுரண்டப்படுவதை இனியும் அனுமதிக்கமுடியாது என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்; எம்.எம்.அப்துர்ரஹ்மான்  தெரிவித்தார்.

நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்துக்கான  வேலைத்திட்டத்தில் நாம் இணைந்து செயற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும் எனவும் அவர் கூறினார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளுடனான சந்திப்பு  அதன் பிராந்திய தேர்தல் காரியாலயத்தில்  புதன்கிழமை (24) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,  

'இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்,  மக்களை சந்திப்பதற்கு அவர்களின் காலடிக்கு வரும்போது, அவரை வரவேற்பதற்கு மக்கள் திரண்டு வந்திருக்கவேண்டும். அதற்கு பதிலாக, பிரதேச அரசியல்வாதிகள் மக்களுக்கு பணம், பொருட்களை இலஞ்சமாக கொடுத்து, அவர்களை பலவந்தமாக அழைத்து வரவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அந்தளவுக்கு மக்கள், இன்று இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆனால், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி எமது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள  உங்களை உண்மையில் பாராட்டவேண்டும். உங்களை போன்று, இன்று இந்த நாட்டின் அனைத்து மக்களும் உண்மையான நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்தை வேண்டி ஏங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இன்று ஆளும் தரப்பு அமைச்சர்களும் பிரதேச மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கூட, நாளாந்தம் இந்த ஆட்சி மாற்றத்தை நோக்கி பெருமளவில் வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று மக்களின் விழிப்புணர்வு காரணமாக வேறு வழியின்றி இந்த முடிவுக்கு  தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து தாங்கள் இந்த அநீதியான ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்தால், தனக்கு வாக்களித்த மக்கள் மத்தியில்  நிரந்தரமாக காணாமல் போய்விடக்கூடும் எனும் அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவர்களின் கட்சித்தாவலை தடுப்பதற்காக தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றித் தருவதாக பேரம் பேசியும் கூட, மக்கள் இந்த ஆட்சியாளர்களின் சுத்துமாத்துக்களை நம்பத் தயாரில்லை. இவ்வாறு மக்கள் வழங்கிய அழுத்தங்களின் காரணமாகவே இன்று பலரும் எதிரணியில் வந்து இணைந்துள்ளனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இவ்வாறான ஒரு சாதகமான நிலை தோன்றுவதற்கு முன்னரே, இந்நாட்டு மக்களின் நலன் கருதி பல சவால்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கைகோர்த்து தூரநோக்குடன் செயற்பட்டுவருகின்றது.
இன்றைய ஆட்சியாளர்களின் எல்லையற்ற ஆடம்பரமான சுகபோக வாழ்க்கைக்காக இந்நாட்டு மக்களின் உழைப்பு மிகக் கபடத்தனமாக சுரண்டப்படுகின்றது. இதனை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. இன்று அத்தியாவசியப் பொருட்களின் அநியாயமான விலையேற்றங்களின் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு நீண்ட நாட்களாக கோரியும் போராடியும் வருகிறார்கள். ஆனால், அதைச் செய்யமுடியாத இந்த அரசாங்கம், தனது குடும்ப உறுப்பினர்களின் கண்மூடித்தனமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பல கோடி ரூபாய்களை மாதாந்தம் செலவு செய்கின்றது.' என்றார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X