2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி ஜனாதிபதியானால் ஜா.ஹெ.உ. ஆட்சி செலுத்தும்:ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதியானால், ஜாதிக ஹெல உறுமயவே ஆட்சி செலுத்தும். அது பொது பல சேனாவை விட அபாயகரமானது. இது நீண்டகால நோக்கில் சிறுபான்மை இனங்களுக்கு ஆபத்தான நிலைமையை தோற்றுவிக்கும் என்று  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூர் அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எம்.ஜமால்தீன் தலைமையில் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) வாழ்வின் எழுச்சி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்த அரசாங்கத்தில் எமக்குள்ள ஒரேயொரு பிரச்சினை பொது பல சேனாதான். மற்றப்படி அனைத்தும் சிறப்பாக நடந்தேறியிருக்கின்றன. பொது பல சேனாவினால்தான் முஸ்லிம்கள் கவலையடைய வேண்டியுள்ளது. ஆனால், எமது சமூகம் மிகக்கவனமாக இந்தப் பிரச்சினையை கையாளவேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கின்றார்.

பொது பல சேனாவை விட இந்த நாட்டில் முஸ்லிம் விரோதப்போக்கை கடந்த ஆறேழு வருடகாலமாக முன்னெடுத்து வருபவர்கள் ஜாதிக ஹெல உறுமயவினர். இவர்கள் இப்பொழுது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அணியில், மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.

அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு மடமைத்தனமாக முடிவெடுத்து இந்த சமூகத்தை நாம் அழிவுப்பாதைக்கும் அவமரியாதைக்கும் ஆளாக்கிவிடக்கூடாது.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், ஜாதிக ஹெல உறுமயவின் சிந்தனைகளைத்தான் இந்த நாட்டில் அமுல்படுத்தப் போகின்றார்.  அவர்களது சிந்தனை இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களைத் துடைத்தெறிவதுதான். அதற்கான பல்வேறு நீண்டகால வேலைத்திட்டங்களை அவர்கள் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அதை அவர்கள்  மைத்திரிக்கு ஊடாக அமுல்படுத்த முற்படுவார்கள். அது நடைமுறைக்கு வந்தால் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்கள் பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தற்பொழுது 18 முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்கின்றார்கள். ஆனால், ஜாதிக ஹெல உறுமயவின் தொகுதிவாரி தேர்தல் யோசனை நடைமுறைக்கு வந்தால் ஆகக்கூடியது 4 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடெங்குமிருந்து தெரிவாகும் நிலை தோன்றும்.

ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக மாறி முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்காளர்களின் சவால்களை முறியடிக்க வேண்டும்.  நிச்சயமாக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவே வெற்றிபெறுவார். அதன் மூலமாக அடுத்த பொருளாதார அபிவிருத்தி தசாப்தம் உருவாகும். அதற்காக ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியிலே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களும் பங்காளர்களாக மாறவேண்டும்.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏறாவூர் பிரதேச வாழ்வின் எழுச்சித் திட்டப் பயனாளிகளுக்கு ரூபாய் 30 இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக 5000 மாணவர்களுக்கு பாடாலைப் பைகளும் கல்வி உபகரணங்களும் 29 தையல் இயந்திரங்கள், 55 துவிச்சக்கரவண்டிகள், 192 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு என்பனவற்றுடன் 150 பேருக்கு இலவச குடிநீர் விநியோகத்துக்கான இணைப்புக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சித் திட்ட மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம். முஸம்மில், பிரரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எச்.எம் மாஹிர் உட்பட இன்னும் வாழ்வின் எழுச்சித் திட்டப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X