2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மை மக்கள் சுயமரியாதையுடன் வாழும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்: கமலதாஸ்

Gavitha   / 2015 ஜனவரி 11 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள், சுய உரிமையுடனும் சுய கௌரவத்துடனும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று, மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது காரியாலயத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையினால் நடத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'கடந்த இரண்டு வருடங்களாக, மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபை எனும் பெயரில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டு மக்கள் ஒரு சிறந்த ஜனநாயக ரீதியான தேர்தலை எதிர்கொண்டு, வெற்றி கண்டுள்ளனர்.

இந்த தேர்தல் வன்முறையற்ற ஆரோக்கியமான ஒரு ஜனநாயக தேர்தலை நாட்டு மக்கள் நிறைவேற்றி, அதில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியதற்காகவும் தேர்தலில் பங்கெடுத்த சகல பிரஜைகளுக்கும் எமது பிரஜைகள் சபையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த தேர்தலை மிகவும் கன்னியமானகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு உதவியதுடன் தனது கடமையை பண்புடனும் நேர்மையாகவும் ஆற்றிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கும் மிகையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தோல்வியை ஏற்றுக்கொண்டு, கன்னியமாக விடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் புதியதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, கன்னியத்துடனும் சிறுபான்மை மக்களின் குரல்களை செவிமடுத்தும் அவர்களது குறைகளை நீக்கி தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களிலும் எமக்கு நன்கு தெரிந்தவர். நல்லாட்சி மற்றும் ஊழல் அற்ற ஆட்சியொன்றை எங்களுக்கு ஸ்தாபித்து தருவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நாம் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பு பிரஜைகள் சபையானது, இங்கு சகல இன மக்களிடையே  புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, அதற்காக உழைத்து வருவதுடன், மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து உதவிகளை செய்து வருகின்றது.

இப்பிரஜைகள் சபையிலுள்ளவர்கள் தனிப்பட்ட ரீதியாக, அவர்களின் சொந்த விருப்பத்துடன் அரசியலில் ஈடுபட்டு தனிப்பட்ட வகையில் எந்த வேட்பாளரையேனும் ஆதரித்திருப்பார்கள். அது அவர்களது சுதந்திரம். ஆனால், இச்சபை தேர்தல் காலங்களில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சபையின் ஆலோசகர் எம்.எஸ்.இஸ்ஸதீன், பிரதி தலைவர் ஏ.எல்.ஜுனைத் நழீமி, மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா அமீர் ஹம்சா, சபையின் செயலாளர் எம்.அன்வர், மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவி திருமதி சோபா சிவசுப்பிரமணியம் உட்பட அதன் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X