2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை கோரவில்லை: சசிதரன்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 11 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் எந்தவித அமைச்சுப் பதவிகளும் வேண்டும் என்று  இதுவரையில் தாம் கோரவில்லை. ஆனால், மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி பல கோரிக்கைகளை தமது தலைமையகத்திடம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.

ஐ.தே.க. வின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரனின் இல்லத்தில்  சனிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,  

'பிரதான வாய்க்கால்களுக்கு கொங்கிறீட் இடுதல், கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடத்தை நிறுவுதல், வாழைச்சேனை காகித ஆலையை புனரமைத்து இயங்கச் செய்தல், மாவட்டத்திலுள்ள 28,000 விதவைகளுக்கு  வாழ்வாதார உதவி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவை அனைத்துக்கும் எமக்கு உதவுவதாக எமது தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

 கடந்த 20 வருடகாலமாக இலங்கையில்  ஆட்சியில் இல்லாமல் நாங்கள் இருந்தோம். தற்போது மக்கள் மாற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், அவர்கள்  எம்மை தேடியும் வருகின்றார்கள்.  

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட ரீதியில் துரிதமாக செயற்படவுள்ளது. இந்த செயற்குழுவை பிளவுபடுத்தும் நோக்கில்,  எமது கட்சியில் அங்கத்துவம் இல்லாதோரினால்;  சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு பூரண வெற்றி கிடைத்துள்ளது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது' என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X