2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய ஜனாதிபதிக்கு மட்டு. சிவில் அமைப்பு கடிதம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் பேசும் மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அதாவது காணி, மீள்குடியமர்வு, காணாமல் போனோர், சிறையில் வாடும் இளைஞர்கள், போரினால் உருவான விதவைகள், இராணுவப்பிரசன்னம், மதுபானச்சாலைகளின் அதிகரிப்பு, தொழிலின்மை, கல்வி, சுதந்திரமான செயற்பாடு என்பவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள்  நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிலையிலிருந்து வருகின்றன என்று மட்டக்களப்பு சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதன்கிழமை (14) அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு மட்டக்களப்பு சிவில் அமைப்பு கூறியுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,000 இற்கும்  மேற்பட்ட போர் விதவைகள் கவனிப்பாரற்ற நிலையிலும் 45 சதவீதத்துக்கு மேற்பட்ட பாடசாலை இடைவிலகலும் 55 இற்கும்  மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்களும் தொழில் இன்றிய ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும், 16,000 இற்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக வீடுகளற்ற நிலையிலும் வரட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீருக்கு அலைகின்ற பரிதாப நிலையும் காணப்படுகின்றன.

இந்த நாட்டின் உயர் பதவியை அதாவது, நாட்டுத் தலைமையை பொறுப்பெடுத்துள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய நீங்கள், புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவினதும்  உங்களுடன் இணைந்துள்ள ஏனைய தலைவர்களினதும் துணையுடன் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்துவருகின்ற பிரச்சினைகளை தீர்த்து, இம்மக்களும் பெரும்பான்மை சமூகம் அனுபவித்துவருகின்ற சகல உரிமைகளையும் பெற்று வாழும் நிலைமையை ஏற்படுத்துவீர்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் வெகுவாக நம்புகிறது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் இன, மத, மொழி பேதமின்றியும் எவ்வித பக்கச்சார்பு இன்றியும்; மக்களது முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளுக்கு உதவுகின்ற ஓர் அமைப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக இயங்கிவருகின்ற ஒரு நடுநிலையான அமைப்பாகும்.

தாங்கள் அனுபவித்துவருகின்ற தங்களது பிரச்சினைகளுக்கு ஓரளவாயினும் தீர்வு வரும் என்ற நம்பிக்கையிலும் நாட்டில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பிலும் தங்களுக்குரிய இடமும் அந்தஸ்த்தும் கிடைக்கவேண்டும் என்ற விருப்பிலும் தமிழ் பேசுகின்ற மக்கள், உங்களுக்கு தங்களது அமோக ஆதரவை அளித்திருக்கின்றார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அதேநேரம், அம்மக்களினது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் விருப்பும் வீண் போகாத வகையில் நீங்கள் செயற்படுவீர்கள் என்றும்  சிவில் சமூகம் எதிர்பார்க்கின்றது.

இத்தருணத்தில் தாங்கள் நீண்ட தேகசுகமும் திடமான மனோபலமும் பெற்று நாட்டில் சிறந்த ஆட்சியை மேற்கொள்ளவும் உங்கள் ஆட்சியில் சமாதானமானதும் நிம்மதியானதுமான சமூகம் ஒன்று உருவாக தங்களை மட்டக்களப்பு சிவில் சமூகம் மனதார வாழ்த்துகிறது'  எனத்  தெரிவிக்கப்பட்டுள்து.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X