2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தொழிற்சங்க உருவாக்கத்துக்கு கண்டனம்

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

அகில இலங்கை தமிழ் தாதியர் சங்கம் என்ற பெயரில் இனவாதத்துடன் கூடிய தொழிற்சங்கம் ஒன்றை  உருவாக்குவதற்கு சிலர் முயற்சிப்பதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய துணை இணைப்பாளர் கே. ஜகநீதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலக அளவில் போற்றப்படும் உன்னதமான தாதியச் சேவையை இன, மதஇ மொழி பேதமற்ற முறையில் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது தாதிய தொழிற்சங்கவாதிகளாகிய எங்களது கடமையாகும்.

தாதிய தொழிற்சங்கமானது தாதியர் உரிமையை பாதுகாப்பதுடன் தாதியச் சேவையை மேன்மைப்படுத்தி அதனூடாக ஒரு சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் விசேட தேவவையுடைய தாதிய உத்தியோகத்தர்கள் அகில இலங்கை தமிழ்; தாதியர் சங்கம் என்ற பெயரால் ஒருதொழிற் சங்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தகைய தூரநோக்கற்றஇ சுய நலத்துடன் கூடிய தமது இருப்பையும் சலுகைகளையும் பலப்படுத்துவதற்கு இன அடையாளத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றவர்களின் செயற்பாடுகளையும் முனைப்புகளையும் எமது அரச தாதியர் உத்தியோகத்தர்கள்  சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

இன,மத,மொழி,கலாசார அடையாளம் எதுவுமற்றதாக இச்சேவை அமைய வேண்டும் என்பதற்காகவே பொதுவான சீருடையுடன் கூடியதாக தாதிய சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

கடமை நேரத்தில் இனஇமதஇ அடையாளங்களை வெளிப்படுத்துவது தாதிய சேவையின் நீதிநெறிக் கோவைக்கு முரணானது.

ஆகையினால் இனவாத தொழிற் சங்கத்தை உருவாக்குவதும் புனிதமான தாதிய சேவைக்கு முரணானதே.
எமது நாட்டில் தாதிய சேவையை பாதுகாப்பதற்காகவும் தாதியர் உரிமையை பெற்றுக் கொடுக்கவும் பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்ட சங்கமாக சமன் ரத்னபபிரிய வின் தலைமையின் கீழ் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் இயங்கி வருகின்றது.

தாதியர் நலம் சார்ந்த சகல செயற்பாடுகளுக்காகவும் கடந்த 18 வருடங்களாக போராடிய நீண்ட அனுபவம் எமக்குண்டு.
வடக்கு, கிழக்கில் பணியாற்றும் தாதியர்களின் விசேட தேவையில் கவனம் செலுத்தும் சங்கமாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் ஆரம்ப காலத்திலிருந்தே  தொழிற்பட்டு வருகின்றது.

இச்சங்கத்தில் தமிழர்களை கௌரவப்படுத்த தமிழ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தலைமையின் கீழ் எமது சங்கம் இயங்குகிறது.

தாதிய சேவையென்பது, கடதாசியுடன் கூடியவேலை அல்ல. இரத்தம், சதை, எலும்பு, உணர்வு கொண்ட உயிர்வாழும் ஜீவன்களின் பரிதவிப்புடன் கூடிய சேவையாகும்.

கடதாசிகளுடன் செய்யப்படும் வேலைகளில் பிழை ஏற்பட்டால் கிழித்தெறிந்து விட்டு வேறு கடதாசியை பயன்படுத்த முடியும்.

ஆனால் உயிரோட்டத்துடன் கூடிய தாதியத்தில் பிழை ஏற்பட்டால் மீள் பெறமுடியாத இழப்பே ஏற்படும். இன அடையாளத்துடன் கூடிய தாதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்குவதால் இவர்கள் அடையப்போகும் இலாபம் என்ன? இவர்களால் இச்சமூகத்துக்கு இத்தொழிற்சங்கத்தினூடாகப் பெற்றுக் கொடுக்கவிருக்கும் நன்மை என்ன?

தொழிற்சங்கவாதிகளாக இன விகிதாசாரத்திற்கேற்ப சுகாதாரச் சேவையில் இவர்களால் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? என்பதையும் அறிஞர்களும் மக்களும் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, சகலரும் இதில் கவனமெடுத்து இன அடையாளமற்ற மக்களுக்கான சேவையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என எமது சங்கம் எதிர்பார்க்கின்றது.

எனவே, இன அடையாளத்தை அரசியல்வாதிகள் இச்சேவையில் ஏற்படுத்தி பிளவை தாதியருள் ஏற்படுத்தக் கூடாது என்பதை வினயமாக கேட்டுக் கொள்கிறோம். இச்சேவையை பாதுகாத்து மக்களையும் பாதுகாக்கும் உணர்வுடன் சகலரும் செயற்பட வேண்டுமென எமது அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் வேண்டுகிறது' என குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .