2025 மே 16, வெள்ளிக்கிழமை

முருக்கையடிமுனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  முருக்கையடிமுனை கிராம பொதுமக்கள் இன்று புதன்கிழமை  கவனயீர்ப்பு போராட்டத்தை  மேற்கொண்டனர்.

தங்களது காணிகளை வாகரை 233ஆவது இராணுவ படைப்பிரிவினர் தங்களது தேவைக்காக கையகப்படுத்தியுள்ளதாகவும் தமது காணிகளை மீளக் கையளிக்குமாறும் தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு  முன்பாக இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்ட இறுதியில் வாகரை  பிரதேச செயலாளர் எஸ்.இராகுலநாயகியிடம் மகஜர் ஒன்றையும்   கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் கையளித்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டு  மே மாதத்தில் முருக்கையடிமுனை கிராமத்தினை விட்டு நாங்கள்  இடம்பெயர்ந்தோம். பின்னர் 2007ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நாங்கள் மீள்குடியேறுவதற்க்காக எமது கிராமத்திற்கு திரும்பியபோது எமது வாழ்விடங்களில் படையினர் முகாம் இட்டுள்ளதை தெரிந்துகொண்டோம். வாழ்ந்த கிராமமானது வளமிக்க மண்னையும் நிரந்தர வருமானம் தரத்தக்க மரங்களையும் கொண்டிருந்ததுடன் வளமிக்க மண் என்பதால் வீட்டுத் தோட்டத்தின் ஊடாக அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வழிகளை கொண்ட கிராமமாக இருந்தது.

ஆற்றையும் கடலையும் அண்மித்ததாக எமது கிராமம் இருந்ததால் விரும்பிய நேரத்தில் கடற்றொழிலை செய்வதற்கு மிக இலகுவாக இருந்ததுடன், கடற்றொழில் உபகரணங்களுடன் பயணப்படுவதும் மிக இலகுவானதாகவும் இருந்தது.
மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இக்கிராமத்தில் வாழ்ந்த எம்மை அங்கு மீளக்குடியமர்த்தாமல் ஊரியன்கட்டு என்ற பிரதேசத்தில் வீடமைப்புக்களை செய்து குடியேற்றியுள்ளீர்கள்.

முருக்கையடிமுனையில் சுமார் 80 பேர்ச்சுக்கு மேற்பட்ட காணியில் வசித்துவந்த எமக்கு தற்போது வெறும் 18 பேர்ச் அளவுள்ள காணிகளே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், வீடமைப்புக்களை செய்த இடமானது எவ்வித வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்காத நிலமாக உள்ளது. ஊரியன்கட்டில் குடி தண்ணீரை பெற்றுக்கொள்வதற்கே கடும் கடின நிலையில் உள்ளது. இங்கு எவ்வாறு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைத்து எமது வாழ்வை நகர்த்துவது. தற்போது மீளக்குடியேற்றப்பட்டுள்ள ஊரியன்கட்டில் இருந்து கடல் மற்றும் ஆற்று மீன் பிடிக்கு செல்வதாயின,; நாளந்தம் ஒரு கிலோ மீற்றருக்கு மேல் நடந்து செல்லவேண்டி இருப்பதுடன் மீன்பிடி உபகரணங்களையும் தூக்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் இரவு நேர மீன்பிடி உட்பட எமது வாழ்வாதரமான மீன்பிடி நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக அழிவுக்குள்ளாகி வருகின்றது.

47 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்ட்டுள்ள ஊரியன்கட்டில் தண்ணீரை பெற்றுக்கொள்ள மிகக் கஷ்டப்;படுவதுடன் கரல் கலந்த நிலத்தடி நீரினையே சில இடங்களில் பெற்றுக்கொள்ள முடிகின்றது. மழை நாட்களில் வெள்ளம் தேங்கி நிற்;கும் இக்கிராமத்தில் போக்குவரத்து முற்றாக செயல் இழப்பதுடன் தொற்றுநோய்களும் பரவி எங்களை வாட்டுகிறது.
மட்டு., திருமலை பிரதான வீதிக்கருகில் இருக்கும் எமது கிராமமான முருக்கையடிமுனை கிராமத்தில் இருந்தபோது எவ்வித போக்குவரத்து வசதியீனங்களையும் நாம் எதிர்கொண்டதில்லை. ஆனால், தற்போது ஊரியன்கட்டில் இருந்து சுமர் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்துசென்றால்தான் பிரதான வீதிக்கு செல்லமுடிகிறது. வயோதிபர்கள் நோயாளிகள் கடும் அவஸ்தைப்படுவதுடன் பாடசாலை சிறார்கள் நடந்து சென்று வரும் போது ஆபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
2007ஆம் ஆண்டில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை கையளித்து எம்மை அச்சுறுத்தி எமது கையொப்பங்களை பெற்றுக்கொண்டனர். அப்போது இருந்த நிலையில் அச்சத்தாலும் அச்சுறுத்தல்களாலும் நாம் அக்கடிதங்களில் கையெழுத்திட்டிருந்தோம். எமது காணிகள் அக்கடிதங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக எமது விருப்பத்திற்கு மாறாக கையகப்படத்தப்பட்டதாக தற்போது அறிகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .