2025 மே 16, வெள்ளிக்கிழமை

கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கபடும் என ஜனாதிபதி உறுதி:செல்வராசா

Sudharshini   / 2015 ஜூன் 27 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடுதிரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் இணைந்த பின்னர், வறுமை நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுச்சென்று மீண்டும் நாடும் திரும்பிய 20க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு குறித்த இளைஞர்களின் குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இது தொடர்பான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அதில் இருந்து விலகி குடும்ப வாழ்வில் இணைந்து வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தொழில்களை மேற்கொண்டுவந்தனர். இவர்கள் தமது குடும்பங்களை பார்ப்பதற்காக மீண்டும் இலங்கை வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரையில் 20பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடந்த மாதம் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் இது தொடர்பில் தெரிவித்திருந்தேன். அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களின் விவரங்களையும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமும் கையளித்திருந்தேன்.

இது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளரினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளரை சந்தித்து நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துகொண்டேன். இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரை நியமித்து குறித்த கைதுகள் தொடர்பான அறிக்கையினை எனக்கு வழங்குமாறு செயலாளர் பணித்திருந்தார்.

இதனடிப்படையில் இந்த கைதுகள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளதனால் புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு போகும்போதும் நாட்டுக்குள் வரும்போதும் கைதுசெய்யப்படுவதாகவும் அவர்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்கப்படாமல் புனர்வாழ்வு மட்டும் அளிக்கப்படுவதாகவும் அவர்களை உறவினர்கள் பார்வையிடுவதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல அனுமதியளித்து அவர்களை கௌரவமான முறையில் அழைத்துச்செல்லாமல் இவ்வாறு குற்றவாளிகள்போல் கைதுசெய்யப்படுவது தொடர்பில் குறித்த பொலிஸ் அத்தியட்சரிடம் எனது ஆட்சேபனையை தெரிவித்தபோது அதனை அவர் ஏற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றினை கொண்டுசெல்வதாக தெரிவித்தார்.

இதுதொடர்பில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு குழு சந்தித்தபோது, கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்களின் விடுதலை தொடர்பிலான விரைவான நடவடிக்கையினை எடுப்பதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

 

 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .