2025 மே 16, வெள்ளிக்கிழமை

த.தே.கூ. மீதான அதிருப்தியிலேயே சுயேட்சையாக களமிறங்கினோம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சித்தாண்டி பிரதேசத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு முறைகேடான முறையில் நடைபெற்றத்தையிட்டு,  சித்தாண்டி இளைஞர் அணியினர் சுயேட்சைக் குழுவில் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ளது என்று அதன் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் தெரிவித்தார்.

சித்தாண்டியில் திங்கட்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேர்தலில் களம் இறங்கவிருந்த  வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்றது.

கல்குடாத்தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் இம்முறை களம் இறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சித்தாண்டி பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க புதுமுக வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக அனுப்பப்பட்ட வேட்பாளர் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டு தெரிவு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இறுதி வேட்பாளர் பட்டியல் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைராஜாசிங்கம் தெரிவித்தபோதிலும்,  சித்தாண்டிப் பிரதேசத்திலிருந்து வேட்பாளராக தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தாண்டிப்  பிரதேசத்திலிருந்து தெரிவான வேட்பாளர் பெயர் அகற்றப்பட்டு சௌந்தராஜானின் பெயரை சிபாரிசு  செய்துள்ளமை எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டை கண்டித்து இன்று நாங்கள் இளைஞர்களாக 8 பேர் சேர்ந்து சுயேட்சைக்குழுவில் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் 20ஆவது சுயேட்சைக் குழுவாக பதிவு செய்து போட்டியிடவுள்ளோம்' என்றார்.

மேலும்,' இன்று சுயேட்சைக் வேட்பாளராக களம் இறங்கியதன் முக்கிய நோக்கமானது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் பிரதேசத்துக்கு நாங்கள் தெரிவுசெய்த வேட்பாளரை தெரிவுசெய்வதில் காட்டிய தில்லுமுல்லு காரணமே தவிர,  சித்தாண்டி மக்களும் மற்றும் அண்டிய எங்களது பிரதேச மக்களும் தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரசுக் கட்சிக்கு ஒன்றை  கூற விரும்புகின்றேன். எதிர்காலத்தில் சித்தாண்டிக்கு தேசியல் பட்டியல் என்ற விடயத்தில் கவனம் செலுத்துங்கள் அல்லது மாகாணசபை, பிரதேச சபை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி, எங்கள் பிரதேசத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் பெற்றுத்தரவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .