2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

5 உறுப்புகளை தானம் செய்து ஐவருக்கு வாழ்வளிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள்  தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பிரதான வீதியில் கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டது.

இதில்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

  வெள்ளிக்கிழமை 21.04.2023 இடம்பெற்ற இந்த விபத்தின்போது படுகாயடைந்த அவர், மூளைச் சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களைத் தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

அதனடிப்படையில் மூளைச்  சாவடைந்த ரேனுஜனின் சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய அவயவங்கள் தேவையுடையோருக்கு பொருத்தும் வகையில் தானம் செய்யப்பட்டதாக ரேனுஜனின் சகோதரி இந்திரசேன கிரிஷாந்தினி தெரிவித்தார்.

தமது சகோதரனை இழந்தது ஆறாத் துயரமாக இருந்த போதிலும் தமது சகோதரனின் உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும் என்பதில் தமது சகோதரன் சாகா வரம் பெற்றுள்ளதாக நினைத்து தமது குடும்பத்தினர் பெருமையடைவதாக கிரிஷாந்தினி தெரிவித்தார்.

அத்துடன் இதுபோன்று உடலுறுப்புக்களைத் தானம் செய்ய தாமும் தமது குடும்பத்தவர்களும் சித்தமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே எப்போதும் பொது நலனில் அக்கறைகொண்டுள்ள கிரிஷாந்தினி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரத்த தானம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

ரேனுஜனின் உடல் அதிகளவானோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை 22.04.2023 சித்தாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X