2021 மே 15, சனிக்கிழமை

‘அமரர் சந்திரசேகரனின் வழியை பின்பற்றி தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது’

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்   

“அமரர் சந்திரசேகரனின் வழியை பின்பற்றி, அமைச்சர் பழனி திகாம்பரம், பெருந்தோட்டப் பகுதியில் தனி வீட்டுத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.  

டிக்கோயா, ஹொன்சி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,   

“மலையக அரசியலில் சரித்திர நாயகனாகவும் புரட்சித் தலைவனாகவும் செயற்பட்ட அமரர் சந்திரசேகரனால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர்களில் முக்கியமானவர் அமைச்சர் திகாம்பரம். சரித்திர நாயகன் சந்திரசேகரன் தந்த மற்றுமொரு சரித்திர நாயகனாக, அமைச்சர் திகாம்பரம் செயற்பட்டு வருகின்றார்.   

மலையக மக்களின் நீண்டகால கனவாக இருந்த தனி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த சமூகத்தலைவன் அமரர் சந்திரசேகரனேயாவார். இன்று இந்தத் திட்டத்தை, முறையாக முன்னெடுப்பதற்கு, அதற்கான அமைச்சொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் தனது அரசியல் அதிகாரத்தை மக்கள் செல்வாக்குடன் பெற்றுக்கொண்டவர் அமைச்சர் திகாம்பரமாவார்.   

அயராத முயற்சியினால், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்குரிய காணிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர் வெற்றிக்கண்டுள்ளார். தற்போது, தூய காணியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான, முறையான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நாம் தற்போது ஆரம்பித்துள்ள தனிவீட்டுத் திட்டத்தை குழப்புவதற்கு, அரசியல் வாங்குரோத்து நிலையயை அடைந்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹொன்சி தோட்டத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. எனினும், தொழிலாளர்கள் இந்தச் சதித் திட்டத்தை நன்கு புரிந்துகொண்டு, ஒற்றுமையாக செயற்படுகின்றனர்.   

மலையக வீடமைப்புத்திட்டத்தின் ஊடாக, அரசியல் தொழிற்சங்க ரீதியான செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக ஒற்றுமை கருதியே, அமைச்சர் திகாம்பரம் செயற்படுகின்றார் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .