2021 மே 14, வெள்ளிக்கிழமை

தலவாக்கலை பேர்ஹாம் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

தோட்டங்கள் காடகி காட்சியளிக்கின்றது, தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது மற்றும் குடிநீருக்கும், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை ஆகிய பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து, தலவாக்கலை, பேர்ஹாம் தோட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேர்ஹாம் தோட்டத்தின் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று (20) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பேர்ஹாம் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதால் வேறு தோட்டங்களுக்கு அங்கு பறிக்கப்படுகின்ற தேயிலை கொழுந்து கொண்டு செல்லப்படுவதனால் தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் ஏனைய தொழிற்சாலை ஊடாக கிடைக்கும் சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, தோட்டத்தின் தேயிலைமலைகள் காடாகப்பட்டிருப்பதால், தோட்ட நிர்வாகம் பணிக்கும் தேயிலை இறாத்தலைப் பெறமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வருமான ரீதியில் தாம் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு ஆளாகியுள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்திடம் இது குறித்து வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது செயல்பட்டு வருவதால் இவைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொழில் ரீதியில் முன்னேற்றமடைய பேர்ஹாம் தோட்ட மலைகளைத் துப்பரவு செய்து, அட்டைக்கடி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையில் இருந்து தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டுமென, தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .