2025 மே 03, சனிக்கிழமை

‘அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?’

Gavitha   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், எஸ்.கணேசன்

உதய கம்மன்பில கூறுவதைப் போன்று, இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்றால், அப்படியாயின் அரசியல் கைதிகள் அனைவரும் காணாமல் போய்விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்ணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (17), ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு, யுத்தம் நிறைவடைந்த பின்னர், பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களும் யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகளும், அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

“அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில், அவர்களை விடுதலை செய்து, குடும்பத்துடன் இணைத்த விடயங்களை, அப்போதைய ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ செய்திருந்தார்” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது முதல், அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அவர்கள் தொடர்பில், சர்வதேசத்திலும் இலங்கையிலும் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அனைத்து அரசியல்வாதிகளும், மேடைகளில் இது தொடர்பில் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தனை சம்பவங்கள் நடக்கும்போது, உதய கம்மன்பில மாத்திரம் உறக்கத்தில் இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் இலங்கையில் இல்லை என்று அவர் கூறியுள்ளமையானது, அரசியல் கைதிகள் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்களா அல்லது அவ்வாறு திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு இல்லையெனில், இது உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட கருத்தா என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தானது, வட-கிழக்கில் மாத்திரமல்லாது, மலையகத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஏனென்றால், சிறைகளில், மலையக இளைஞர்களும் கைதிகளாக அடையாப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X