2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரண்டு வாரங்களின் பின்னர் அக்கரப்பத்தனை பிரதேச சபை திறப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, கடந்த 20 ஆம் திகதி மூடப்பட்ட பிரதேச சபை, இரண்டு வாரங்களின் பின்னர் இன்று (4) மீண்டும் திறக்கப்பட்டது.

சபையின் உறுப்பினர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும்  பிரதேசசபை முழுமையாக தொற்றுநீக்கம் செய்யப்பட்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே  திறக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் அச்சமின்றி தொடர்ந்து பிரதேசசபையின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடத்தால் தான் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

'அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து என்னை இடைநிறுத்தியதால், எனது பக்க நியாயத்தை நான் எடுத்துக்கூறினேன். பொதுமக்களுக்கு சேவையாற்ற சென்றே நான் இந்தத் தொற்றுக்கு உள்ளாகியதையும் எடுத்துக்கூறினேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டபோது தனிமைப்படுத்தலில் இருக்குமாறு தனக்கு யாரும் அறிவிக்கவில்லை என்றும் எனினும் தன்னால் ஏற்பட்ட இடையூறுகளுக்காக இ.தொ.காவின் உயர்பீடத்திடமும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும் அரசாங்கத்திடமும் பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச சபையின் செயப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கட்சி தனக்கு அறிவுறுத்தியதாகவும் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவுறுத்தியதற்கமைய தான் தனது சொந்த நிதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X