Kogilavani / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இந்தியாவின் கிரிக்கெட் அணிக்கு, 100 கோடி பேரில் ஒரு தமிழனாக நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றுச் சுட்டிக்காட்டிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், ஆனால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2 கோடியில் ஒரு தமிழனை தெரிவுசெய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற இளைஞன், ஒரு தமிழனாக இந்திய கிரிக்கெட் அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டு சாதித்துக்கொண்டு இருக்கிறார் என்றும் ஆனால், இலங்கையில் அவ்வாறு தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.
இங்கு இனவாதத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக மேற்படி இளைஞனைப் பற்றியே பரவலாகப் பேசப்படுவதாகவும் அந்த இளைஞன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, சர்வதேச அரங்கில் தனது திறமையை நிருப்பித்துக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
'அத்துடன் அவர் அவுஸ்திரேலியா மண்ணில் இருந்துகொண்டு, சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்மொழியில் தன்னுடைய செவ்வியை வழங்கியுள்ளார். இதன்மூலம் அவர் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
'இன்று இலங்கையில் நடைபெறுகின்ற எல்.பி.எல் போட்டிகளில், எத்தனைத் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு சிலருக்கு மாத்திரமே. ஏன் திறமையானவர்கள் இல்லையா? திறமை இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை.
'விளையாட்டில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் இதே நிலைதான். அது அரசியலாக இருக்கட்டும் அல்லது வேறு எந்தத் துறையாகவும் இருக்கட்டும் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை' எனச் சாடினார்.
'இந்தியாவில் ஒரு முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும். சீக்கிய இனத்தைச் சார்ந்த ஒருவர் பிரதமராக வர முடியும். இன்னும் பல சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயர்பதவியை வகிக்க முடியும். அவர்களின் திறமைக்கு மாத்திரமே அங்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் இனரீதியாகவே இவை அனைத்தும் பார்க்கப்படுகின்றது. இது சாபக்கேடாகும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026