2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஊடகங்களுக்கு அஞ்சும் ‘தொண்டா’

Kogilavani   / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸின் தலைமையகத்தில் நடத்தப்படும், ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்படுகின்ற போதிலும், அவர் பங்கேற்றதே இல்லை.

இ.தொ.கா ஏற்பாடு செய்யும் ஊடகவியலாளர்  சந்திப்புக்கு வருகைதருமாறும், அதில், காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, காங்கிரஸின் தலைவர்  முத்துசிவலிங்கம் எம்.பி ஆகியோர் பங்கேற்பர் என்று, காங்கிரஸின் ஊடகப்பிரிவால் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்படும்.

எனினும், ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றால், மேற்குறிப்பிட்ட இருவரில் ஒருவரேனும் சமுகமளித்திருக்கமாட்டார்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியமை தொடர்பில், இலங்கையில் பல்வேறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை ​ வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, நுவரெலியா மற்றும் அம்பேகமுவையில் உள்ளூராட்சிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், பரஸ்பர கருத்துமோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பில், இவ்விருவரில் ஒருவர் பதிலளிப்பார் என்ற நோக்கத்தில், காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானுக்குச் செல்கின்ற ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடனேயே திரும்ப வேண்டிய நிலை​ ஏற்பட்டிருந்து.

ஒரு தடவையல்ல, இரண்டு தடவைகள் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டிருந்தது.

காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்  சௌமிய மூர்த்தி தொண்டமானின் 18ஆவது சிரார்த்த தினம், கொழும்பிலும் மலையகத்திலிலும்  ஒக்டோபர் 30ஆம் திகதியன்று நடத்தப்பட்டது.

கொழும்பில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தொகுக்கு முன்பாக உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்ததன் பின்னர், சௌமிய பவானில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறுமென்றும் அதில், மேற்குறிப்பிட்ட இவ்விருவரும் பங்கேற்பர் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றையதினம், ஊடகவியலாளர் சந்திப்பே இடம்பெறவில்லை. இதேவேளை, நேற்று (08) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்விருவரும் பங்கேற்பர் என்று ஊடகப்பிரிவால் அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், அவ்விருவரில் ஒருவரேனும் பங்கேற்கவில்லை.

இதனால், ஆறுமுகன் தொண்டமான் அல்லது முத்து சிவலிங்கம் ஆகிய இருவரில் ஒருவரிடம் கேள்விகளைக் கேட்பதற்காகத் தயாராகச் செல்கின்ற ஊடகவியலாளர்கள், வெறும் கையுடன் திரும்பவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .