2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’ஊவா மாகாணத்துக்கு ஆசிரியர் கல்வியற் கல்லூரி அவசியம்’

Kogilavani   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில், ஆசிரியர் கல்வியற் கல்லூரி ஒன்றை உருவாக்கும் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், 'மலையக மாணவர்கள், கல்வி பொதுத்தர உயர்தரத்தில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர். மலையகத்துக்கென தனி பல்கலைக்கழகம் இருக்குமேயானால், அவர்களுடைய கற்றல் செயற்பாடுகளுக்கு அது உறுதுணையாக இருக்கும். அத்துடன், ஊவா மாகாணத்தில், ஆசிரியர்  கல்வியற் கல்லூரி ஒன்றின் தேவைப்பாடும் உள்ளது. இவ்விடயம் அங்கிகரிக்கப்பட்ட போதும்கூட நடைமுறையில் இன்றளவும் சாத்தியப்படமால் இருக்கின்றது' என்று அவர் தெரிவித்தார். 

தொடர்ந்துரைத்த அவர், மலையகம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தபோதிலும் கல்வியில் முதன்மை நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

பதுளை, மடுல்சீமை, பண்டாரவளை, லுணுகலை, ஊவாபரணகம, வெலிமடை ஆகிய பிரதேசங்களில் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மலையக மாணவர்களைப் பொறுத்தவரை அது எட்டாக்கனியாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நமது நாடு இலவச கல்வியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றச் சூழ்நிலையில் நாட்டிலுள்ள மாணவர்கள் அனைவருக்கும் இணைய வசதியும்  பெற்றுக்கொடுக்கப் படுமேயானால் மலையக மாணவர்களுக்கு அது மிகச்சிறந்த வரப்பிரசாதமாக அமையும்  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X