2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

கண்டி விவகாரம்; ஆவணங்கள் பற்றி ஆய்வு சட்டரீதியானது என்கிறார் உரிமையாளர்

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனரவிரத்ன

கண்டி - பூவெலிகட, சங்கமித்தா மாவத்தையில் உடைந்து விழுந்த 5 மாடிக் கட்டடத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கி விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இந்தக் கட்டட அனுமதியை வழங்கிய கண்டி மாநகர சபை, தேசிய கட்டட அமைப்பு மற்றும் கட்டுமாணத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொறியியலாளர்கள் வழங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பரிசோதனை செய்யவும், கண்டி பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிறுவனங்கள் தொடர்பிலும், அவை அவ்வாறு அனுமதி வழங்கியுள்ளனவா என்பது தொடர்பிலும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சகல நிறுவனங்களினதும் அனுமதியைப் பெற்றே, கட்டத்தைக் கட்டியதாக, இந்தக் கட்டடத்தின் உரிமையாளரான, அனுர லெவககே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். உரிய தரத்துடனேயே இக்கட்டடம் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம், இந்தக் கட்டடத்தை அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் இது சட்டரீதியாக அமைக்கப்பட்ட கட்டடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமையாளரிடம் பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களிடமும் கண்டி பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளைப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (20) அதிகாலை 5 மணியளவில், 5 மாடிக் கட்டடமொன்று, அதன் அருகிலிருந்த ஹோட்டலொன்றின் மீது விழுந்ததால், ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில், தற்போது புவியியில் ரீதியான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவால் இந்த கட்டடம் உடைந்திருக்கலாம் என வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை எனவும் கட்டுமாணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே, இந்த அனர்த்தத்துக்கு காரணம் என்றும் கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான புவியியலாளர் சமந்த போகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்தக் கட்டடமானது, உரிய தரத்துடன் கட்டப்படவில்லை என, கட்டடம் இடிந்து விழுந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், நிலையற்ற புவியியல் காரணங்கள் அடங்கிய பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் கட்டுமாணங்களுக்கு அனுமதி வழங்கினால், பெறுமதியான உயிர்களே இழக்கப்படும் என்றும் எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற ரீதியில், மாநகர சபை, நகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களைத் தொடர்படுத்தி, இந்த மலைப்பாங்கான பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத, சட்டத்துக்குப் புறம்பானக் கட்டங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உடைந்து வீழுந்துள்ள வீட்டுக்கு அருகிலுள்ள 4 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பலியானவர்களின் மரண பரிசோதனை, கண்டி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .