2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குரோதங்களை மறந்து ’மக்களுக்காகப் பணியாற்றுங்கள்’

Kogilavani   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

“மலையகப் பிரதிநிதிகளுக்கிடையில் குரோதங்கள் அதிகரித்துவிட்டன. இவ்விடயம், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பூதாகரமாகியுள்ளது. இதனால், மலையக மக்களின் வாழ்வதாரமே பாதிக்கப்படுகின்றது” என்று, இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சு.ப.சுப்பிரமணியம் தெரிவித்தார். “எனவே மலையகப் பிரதிநிதிகள், குரோதங்களையும் பேதங்களையும் மறந்து, மக்களுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“அரசமைப்பு மாற்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பிலான முன்னெடுப்புகளுமே, நாட்டின் அரசியலில் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர், நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேசசபைகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு, அவை வெற்றிகண்டுமுள்ளன.

“இத்தகையதொரு சூழலியே, ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலைய விவகாரம், பூதகரமாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள், மலையக மக்களின் அபிவிருத்திக்குக் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் என்பதை, மலையகத் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கமும், மாறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. நாட்டில் அனைத்து மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில், புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெற்று வரும் இந்தத் தருணத்தை, மலையகப் பிரதிநிதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

“அனைத்து மலையகத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களின் உரிமைக்கான ஒரு தீர்க்கமான முடிவைக் காண்பதற்கு, இந்தத் தருணத்தில் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதை விடுத்து, மலையகத்தின் பிரதான கட்சிகள் இரண்டும், மாறி மாறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது சிறந்ததல்ல.
“எனவே, மலையகத்தின் இரு பெரும் கட்சிகளும் இது தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். நாட்டின் அரசியல் சூழலை, மலையக மக்களின் நன்மைக்கான களமாக மாற்றியமைப்பதற்கு, மலையகப் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .