2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘குறுக்கு வழியில் இ.தொ.காங்கிரஸ்’

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களை, முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக்கொடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போது, பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள குறுக்குவழியில் செல்கின்றது என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பாக, அவர் நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவித்துள்ள அவர்,  

 பெருந்தோட்டத் ​தொழிலாளர்களுக்கான ஒரு நாள் அடிப்படைச் சம்பளமாக, 1,000 ரூபாய் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே, பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகக் கூறிய அவர், எனினும், அடிப்படை நாள் சம்பளமாக, 1,000 ரூபாய் கிடைக்காவிட்டால், உடன்படிக்கையில் கைச்சாத்திட மாட்டோம் என, வீராப்புப் பேசிய ஆறுமுகன் தொண்டமானும் வடிவேல் சுரேஷூம் இறுதி நேரத்தில், ‘பல்டி’ அடித்து ‘மெகா’ காட்டிக்கொடுப்பை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.   1,000 ரூபாய் நாள் சம்பளம் கோரிய தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடித்துவிட்டு, 20 ரூபாய் சம்பள உயர்வுக்கு. ‘ஆமாம்சாமி’ போட்டு, கம்பனிகளிடம் முழுமையாக சரணடைந்துள்ளனர் என்றும் இதற்கு பெயர் வரலாற்று வெற்றி அல்ல என்றும் அதற்கு “பச்சைத் துரோகம்” என்றே விளக்கம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.  

கூட்டொப்பந்த விவகாரத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே, மூன்றாம் தரப்பாக அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரியதாகவும் எனினும், கம்பனிகள், தொழிற்சங்கங்களின் கூட்டுத் துரோகத்துக்கு, பிரதமரும் துணை போய்விட்டாரா என்ற சந்தேகமும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.  

இதற்கு, இந்தக் கூட்டொப்பந்தத்தை, அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையே, முன்னுதாரணமாகும் என்றும் இந்நிகழ்வுக்கு, பிரதமர் தலைமை வகித்திருக்க கூடாது என்றும் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.  

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் கைதூக்குமளவுக்கு, தங்களது கூட்டணி வங்குரோத்து அரசியலை நடத்தவில்லை என்றும் மக்களுக்கு துரோகம் - அநீதி இழைக்கப்படுமானால், பதவி, பட்டம் என எல்லாவற்றையும் தூக்கியெறியவும் தயார் நிலையிலேயே தாம் அரசியல் நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .