எம்.செல்வராஜா
கூட்டு ஒப்பந்தத்துக்கு நிகரான மாற்று வடிவமொன்று அவசியம் என்று, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு ஒப்பந்தத்துக்கு நிகரான வகையில் மாற்று செயற்றிட்டமொன்றுக்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளல் வேண்டும் என்று, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் இராஜநாயகம் சலோபராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து விடயங்களுக்கும் விமோசனம் கிட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பதுளை மாவட்டக் குழுவினது விசேட கூட்டம், முன்னணியின் பதுளை பணிமனையில், நேற்று முன்தினம் (3) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும் வகையில், தொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்தச் சட்டமூலமானது, தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு, உட்கட்டமைப்பு வசதிகள், வீடு மற்றும் காணி உரிமைகள், சேமநலன்கள், படித்த இளைஞர் சமூகத்தினருக்கான தொழில்வாய்ப்புகள், கல்வி மேம்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்துக்கு நிகரான வழிமுறைகளைப் பின்பற்றியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.