2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’கொட்டகலையில் பல்வேறு வேலைத் திட்டங்கள்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் கிராமத்துக்கான கலந்துரையாடல் மற்றும் மீண்டும் கிராமத்துக்கான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, கொட்டகலை பிரதேச சபையும் ஆலோசனை வழங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளமையால், ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஆகக் குறைந்தது ஒரு வேலைத் திட்டமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணித் தலைவருமான ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று முன்தினம் (9) நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

கொட்டகலை பிரதேச சபைக்கு 22 வகையான உபகரணத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவற்றில் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிரதேச சபை கேட்போர் கூடத்துக்கான ஒலிபெருக்கி உபகரணங்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவித்தார். 

மேலும் புல்வெட்டும் இயந்திரங்கள், கொங்ரீட் பாதைகளை பரிசோதிக்கும் இயந்திரங்கள் உட்பட சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணத் தொகுதிகள் கிடைக்கவுள்ளன என்றும் இதனூடக பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைகளை இலகுவாக செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நலன் விரும்பிகளினூடாக, பின்தங்கிய பாடசாலைகளை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசங்கள், வெப்பமானிகள், கைகளைச் சுத்தப்படுத்தும் திரவங்கள் முதலானவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பொறுப்பான பிரதேசசபை உறுப்பினர்கள், தமது வட்டாரத்திலுள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக அறியத் தந்தால், அடுத்த வாரத்தில் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.     

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைக்க காரணமாக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இதன்போது நன்றித் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X