Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், காலம் தாழ்த்தாது சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக அரசாங்கம் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் பெருந்தோட்டப் பகுதிகளில் அசாதாரண நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்குமாக இருந்தால், அது அரசாங்கத்துக்கும் தொழிலார்களுக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் எனவே அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைத்து உடனடித் தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
'தோட்டக் கம்பனிகள் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாக தெரியவருகின்றது. இவ்வாறான ஒரு நிலையில், தொடர்ந்தும் இந்த நிலையை முன்கொண்டு செல்ல முடியாது. எனவே இதற்கு உடனடியாக அராசாங்கம் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
'அந்த நிபுணர் குழுவில், கம்பனிகள் சார்பாகவும் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள், ஏனைய தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் சார்பாகவும் பொருளாதாரத்துறை சார்ந்த நிபுணர்களும்; தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பெண்கள் மூவரும் அரசாங்கத்தின் சார்பாக ஒருவரும் அங்கத்துவம் வகிக்கும் வகையில் இந்தக் குழுவை அமைக்க வேண்டும்.
'அவர்களுக்கு ஒரு குறுகிய கால இடைவெளியை கொடுத்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்கின்ற நிலையில் தோட்ட கம்பனிகளின் உண்மையான நிலைமை வெளிவரும். அவர்கள் கூறுவதுபோல தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றதா?அல்லது இலாபத்தில் இயங்குகின்றதா? என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கும்.
'அந்த விடையைக் கொண்டு, தொழிலார்களின் கருத்துகள், கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் கருத்துகள், அரசாங்கத்தின் நிலைப்பாடு, சம்பள நிர்ணயச் சபையின் நிலைப்பாடு, நாட்டில் இருக்கின்ற பொருளாதாரச் சூழ்நிலை இவை அனைத்திலும் கவனம் செலுத்தி 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியும். மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெளிப்படை தன்மை கொண்டதாக அமைய வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.
28 minute ago
36 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
57 minute ago