இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.
கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர்.
பாடசாலைக்கு கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கு புதிய காணியொன்றை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் கடந்த மூன்று வருடங்களாக கல்வி அமைச்சு மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது.
இந்த விடயத்தை மாவட்டத்தின் அரசியல்வாதிகளிடம் கூறியும் எவரும் கண்டுகொள்ளாத நிலை தொடர்ந்த போது, பாடசாலையின் அதிபர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக செந்தில் தொண்டமானை தொடர்பு கொண்டு அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பாடசாலை குறித்தும், நீண்ட நாள்களாக நிலவி வரும் காணி பிரச்சினை குறித்தும் கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.
அதனையடுத்து செந்தில் தொண்டமான் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பிரகாரம்,பாடசாலை அதிபரின் கோரிக்கை ஏற்ப இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணியினை பாடசாலைக்கு வழங்குவதற்கான ஆவணம் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியினால், செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.