2025 ஜூலை 05, சனிக்கிழமை

சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Sudharshini   / 2015 நவம்பர் 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.சங்கீதன்,மொஹமட் ஆஸிக்,கு.புஸ்பராஜா,எஸ்.சதிஸ்,ஆ.ரமேஷ், செ.தி.பெருமாள்

நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இம்மாவட்டங்களில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி மாவட்டங்களில் மழை காலநிலை நீடிக்குமாயின் இம்மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்படும் என கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு பிரிவுத் தலைவர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 14 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் கலா ஓயா, மல்வத்து ஓயாவை அண்மித்துள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதேவேளை, மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் இன்னும் 5 அடி மட்டுமே நிரம்பவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்னும் 2 அடி மட்டுமே நிரம்ப உள்ளதாக லக்ஷபான நீர் மின்நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

மழை தொடருமாயின் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்க நேரிடலாம் என்றும் எனவே, கரையோரங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார். நுவரெலியா கிறகறி வாவியின் வான் கதவு முழுமையாகத் திறக்கப்பட்டதாக நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்தார். அதிக மழை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதெனவும் அவர் தெரிவித்தார்.

பாத்போட் தோட்டத்தில் 20 பேர் வெளியேற்றம்

மேலும், மண்சரிவு காரணமாக அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பாத்போட் தோட்டத்திலிருந்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என இஞ்சஸ்றி பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கராஜ் சுபாச்சந்திரன் தெரிவித்தார். திங்கட்கிழமை (02) இரவு பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த 4 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இவர்களுக்கு, அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மேற்படி குடியிருப்புகளைத் திருத்தி அமைத்து, அவர்களை மீள்குடியேற்றுவதற்;கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

லிந்துலை, ரட்ணகிரி கொலனி, வோல்ட்ரீம்;, கொன்வுட் ஆகிய பகுதிகளில் மண்சரிவு காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் பாதுகாப்புக் கருதி உறவினர்களின் வீடுகளில் இவர்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் பாதிப்பு

இதேவேளை, நுவரெலியாவில் திங்கட்கிழமை பெய்த கடும் மழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வீடுகளும் விவசாய நிலங்களும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. நுவரெலியா, ஹாவாஎலிய, பொரலந்தை, கோட்லோஜ், கந்தப்பளை, பீடறு, மூன்பிலேன், பம்பரகலை, சீத்தாஎலிய, மீப்பிலிமான ஆகிய பகுதிகளில் பாரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயப் பயிர்கள் அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குதிரைப்பந்தய வீட்டுத்தொகுதி, பம்பரகலை வீடமைப்புத் தொகுதி, நகரின் மத்தியில் அமைந்துள்ள லோசன் வீதி குடியிருப்புப் பகுதி, மஹிந்த மாவத்தைக் குடியிருப்புப் பகுதி ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளனவென அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் அறிவித்துள்ளது.

நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள ஒரு சில வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4.00 மணிமுதல் இந்தக் கடும் மழை பெய்தமை காரணமாகப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் காரியாலய உத்தியோகத்தர்களும் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .