Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது சாபக் கேடான விடயம் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான நிலையங்களுக்கு மலையக போராளிகள் மற்றும் தியாகிகளின் பெயர்களை சூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அம்பிகா சாமுவேல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வதிகள் அமைச்சரிடம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை கூறினார்.
அம்பிகா சாமுவேல் கேள்வியெழுப்பி கூறுகையில்,
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அரசாங்கத்தின் அமைச்சின் கீழ் நடத்தப்படுகின்ற ஒரு நிறுவனமாகவும், சட்ட ரீதியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகவும் இருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் பரம்பரை அரசியலை கொண்டு செல்வதற்காக அந்த குடும்பத்தின் பெயர் மலையகத்தில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு சூட்டப்பட்டுள்ளன.
இதில் அங்கத்துவம் வகிக்கின்ற போது, மன்றத்தின் குழுவை தீர்மானிக்கும் போது இ.தொ.கா என்ற தொழிற்சங்கத்தின் அங்கத்துவராக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மலையகத்தின் நன்மைக்காக நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்படாத நிறுவனமாக இது காணப்படுகின்றது. இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அதிகமானவர்கள் சம்பளம் பெற்றுக்கொண்ட போதும், இதன் நடவடிக்கைககள் நடைபெறவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று கேட்டார்.
இதன்போது பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறுகையில்,
மக்களின் வரிப்பணத்தினாலும் வெளிநாடுகளின் அன்பளிப்பாலும் வழங்கப்படும் நிதியில் மக்களுக்காக இவ்வாறான சேவை மன்றங்கள் மற்றும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற போது, அரசியல்வாதியின் பெயரை வைப்பது உண்மையில் சாபக்கேடான விடயமே. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மலையகத்தில் உள்ள போராளிகள் மற்றும் தியாகிகளின் பெயரை அதாவது முல்லோயா கோவிந்தன், மீனாட்சி அம்மையார், ஆபிரிகான் சிங்கன் போன்றோரின் பெயர்களை இவ்வாறான நிலையங்களுக்கு சூடினால் மலையகம் பெருமை கொள்ளும். ஆகவே எதிர்காலத்தில் இது தொடர்பில் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம்.
அதேபோன்று இதனுடைய சேவைகள் மலையக சமூகத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் மாற்றங்களை கொண்டு வருவோம். இதன் நிர்வாக தெரிவுகள் பாராளுமன்றத்தின் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என்றார்.
5 minute ago
22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
29 minute ago
35 minute ago