2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தொண்டமான் பெயர் விவகாரம்: சீறி பாய்ந்தார் ஜீவன்

Editorial   / 2026 ஜனவரி 23 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் ஆனால் அது  தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு என அரசின்  மலையகப்  பிரதிநிதி குறிப்பிடுகிறார். அவர் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் இவர் சபைக்கு வந்து வாய்கிழியப்  பேசுகிறார் என்றார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23)  இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்த சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்  மேலும் பேசுகையில்,

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகாரத்த மண்டபம் பற்றி இன்று வெள்ளிக்கிழமைசபையில் பேசப்பட்டது. 2005 ஆம் ஆண்டே இந்த ஞாபகார்த்த மண்டபம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சராக பதவி வகித்தார் . ஆகவே உண்மையை மறந்து விட்டு பேச வேண்டாம்

2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டபத்துக்கு குடும்ப உறுப்பினர்களின் பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது என்று கேள்வி கேட்கப்படுகிறது.ஜனாதிபதிக்கு வால் பிடித்து  தேர்தலில் வெற்றி  பெற்று பாராளுமன்றத்துக்கு வருகை தருவது பெரிய புத்தசாலித்தனமல்ல, முதலில் அரசாங்கம் என்றால் என்னவென்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  , காமினி திசாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க, இந்த நாட்டில் பல்வேறு மன்றங்கள் உள்ளன.  ஞாபகார்த்த மன்றம் பற்றி பேசுவதற்கும், பெயர் மாற்றம் செய்ய பேசுவதற்கு மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு என்று குறிப்பிடுகின்றீர்கள், எந்த தைரியத்தில்இதனைக் குறிப்பிடுகின்றீர்கள்?அவர் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் சபைக்கு வந்து வாய்கிழிய பேசுகின்றீர்கள். மலையக பிரதிநிதி வந்த வழியை மறந்து விட்டார்.

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று சில மலையகப்  பிரதிநிதிகள் கருதலாம் அது உண்மையில் வீரமல்ல, அது அரசியல் சுயநலம் மற்றும் தலைக் கனத்தால் வரும் முட்டாள்தனம். அதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

  உங்களை விட எனக்கு நன்றாக பேசத்  தெரியும். காலையில் பாடசாலை மாணவர்களை போல் ஒருவர் கேள்வி கேட்க, இன்னொருவர் பதில் சொல்லுகிறார். மலையகத்துக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் பற்றி கேளுங்கள். நாட்டுக்கு சேவையாற்றியவர்களின் பெயர்கள் தான் மன்றங்களுக்கு சூட்டப்படுமே தவிர, நாட்டை அழித்தவர்களின் பெயர்கள்  அல்ல என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X