2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’தனிவீட்டுத் திட்டம் ஜனவரியில் ஆரம்பம்’

Kogilavani   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அதேபோன்று, மலையகத்துக்கான தனி வீட்டுத்திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை, வட்டகொடையில் அமைந்துள்ள பிரஜாசக்தி நிலையத்தில், கூட்டுப்பண்ணை அபிவிருத்தி செயற்றிட்டத்துக்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று (11) நடைபெற்றது.

இந்தக் கட்டடம் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  

'ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர். எனவே கிடைக்கும் என நம்புகின்றோம். தற்போதைய நிலையால் இழுபறி ஏற்பாட்டாலும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாயைவிட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். 

'அப்படியானால் இந்தக் கூட்டுஒப்பந்தத்தில் புதிய வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

'கூட்டுஒப்பந்தம் தொடர்பில் வெளியில் பேசுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு பேசுவது கம்பனிகளுக்கே சாதகமாக அமைகின்றன.

'கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் நிச்சயம் வழங்கப்படும். ஏற்கெனவே வழங்கியும் உள்ளோம்.

'மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழங்கப்பட்டும் உள்ளன.

'மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரியில்தான் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். அறைகுறையாக உள்ள வீடுகளைப் புனரமைப்பதற்கும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

'மலையகப் பல்கலைக்கத்துக்கான இடம், கொட்டகலை ரொசீட்டா பாம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயக் கல்லூரி ஒன்றும் அமைக்கப்படும். விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் பற்றி தீர்மானிக்கப்படும். எனது தந்தை கண்ட முக்கிய கனவொன்றை நிறைவேற்றியுள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X