2025 மே 05, திங்கட்கிழமை

தீபாவளிக்கு வந்த 25 பேருக்கு கொரோனா

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில், நேற்று (23) வரை, 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 25 பேர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் டொக்டர் இமேஷ் பிரதாபசிங்க, இன்று (24) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 442 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இதன் மூலம் 89 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதில் 28 பேர் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

“கொழும்பு உள்ளிட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் பகுதிகளில் இருந்து, வெளியிடங்களுக்கு வரவேண்டாம் என தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. தடுப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி வருகையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. எனினும், அதற்கு முன்பாக வந்தவர்களிடம் தற்போது பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.

அதேவேளை, கொழும்பில் இருந்து தற்போதும் தோட்டப்பகுதிகளுக்கு வருகை தரும் மக்களிடம், கினிகத்தேன, கலுகல்ல பகுதியிலுள்ள  சோதனைச்சாவடியில் வைத்து பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சனிக்கிழமை பெறப்பட்ட 50 பிசிஆர் மாதிரிகளில், 3 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது என்றும் இது, நூற்றுக்கு 3 சதவீதமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல கண்டி - நுவரெலியா வீதியில் எல்பொட பகுதியிலுள்ள  சோதனைச்சாவடியிலும் இன்று (24) முதல், இவ்வாறு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுவதாகவும் இதற்காக விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X