2025 மே 12, திங்கட்கிழமை

நூரளை மாநகரசபையின் சேவை மந்தகதி; உறுப்பினர் இராஜினாமா

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும் நுவரெலியா மாநகர சபை, மக்களுக்காக எந்த சேவையையும் செய்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  உறுப்பினர் எம்.பி.நவரட்ணம், தான் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,  கடந்த இரண்டரை வருடங்களாக தனது காலமும் நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாநகர சபை, மக்களுக்கு எந்தவிதமான ஒரு சேவையையும் செய்ய முன்வருவதில்லை என்றும் சாடியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நியமன உறுப்பினராக நுவரெலியா மாநகர சபைக்கு, கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அன்று தாங்கள் எதிர்கட்சியில் தெரிவு செய்யப்பட்டாலும் ஆளும் கட்சியாக  ஐக்கிய தேசிய கட்சியே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

'கடந்த இரண்டரை வருடங்களாக நான், மக்கள் நலன்சார்ந்த பல செயற்பாடுகளை செய்வதற்கு முயற்சிசெய்த போதிலும் அதற்கு நகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்  கட்சி ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவுமே செயற்படுகின்றார். இதன்காரணமாக, நுவரெலியா நகரத்தில் வரி செலுத்துகின்ற மக்களுக்கு எந்த ஒரு சேவையையும் முறையாக செய்ய முடியாத ஒரு நிலைமை மாநகர சபைக்குள் இருக்கின்றது.

'வரி செலுத்துகின்ற மக்களின் பணம் எந்தவிதமானத் திட்டமிடலும் இன்றி செலவு செய்யப்படுகின்றது. மேலும் நான்  படித்த பட்டய கணக்காளர் என்ற வகையில் படித்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதையோ அல்லது அவர்களுடைய வேலைகளை செய்து கொடுப்பதையோ நகர முதல்வர் விரும்புவதில்லை. படித்தவர்களை அருகில் சேர்த்துக்கொள்ள அவர் விரும்புவதில்லை.

'சத்தமாக பேசுகின்ற ஒரு சில உறுப்பினர்கள், தனியாகக் கவனிக்கப்படுகின்றார்கள். ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த சபைக்கு வந்திருக்கின்றேன். எனக்கு பணமோ வேறு எந்த சலுகைகளோ தேவையில்லை. நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் மிகவும் பின்தங்கிய பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் மாநகர சபை மூலமாக செய்ய முடியாது இருக்கின்றது.

'வெறுமனே இந்த ஆசனத்தில அமர்ந்துகொண்டு, மாநகர சபையில் கிடைக்கின்ற சலுகைகளை மாத்திரம் அனுபவிப்பதால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத இடத்தில் இருப்பதைவிட அங்கிருந்து வெளியேறுவது மேல். இதன் காரணமாக நான் எனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன்' என மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நியமன உறுப்பினர் எம்.பி.நவரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X