2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’பாடசாலைகளின் அபிவிருத்தியில் அரசியல் வேண்டாம்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பாடசாலைகளின் அபிவிருத்தியில் அரசியல் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக அவற்றை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,  

நல்லாட்சி அரசாங்கத்தில், 'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்திச் செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

ஆனால் அபிவிருத்திப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்ட பல பாடசாலைகளை தற்போதைய அரசாங்கம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்காமல் உள்ளதால் புதிததாகக் கட்டப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் பாழடைந்துக் காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் அரசாங்கம் செலவுசெய்த கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

'கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைகளை நாங்கள் முன்னெடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இல்லாமல் யார் அபிவிருத்தி செய்தாலும் அது எங்களுடைய மாணவர்களையே சென்றடையும் என்ற நோக்கத்தில் செயற்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்வர வேண்டும்' என்றும் அவர் அறிவுறுத்தினார். 

'அது மாத்திரம் அல்ல இந்திய அரசாங்கம் ஒன்பது பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 300 மில்லியன் ரூபாய் வழங்கியது. அதற்கான பாடசாலைகள் தெரிசெய்யப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்தவேலைத் திட்டமும் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவு செய்தால், இன்னும் சில பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மூலமாக நிதியைக் கோர முடியும்.
எனவே பாடசாலை அபிவிருத்தியில் அரசியலைப் பயன்படுத்தாமல், மாணவர்களின் நன்மை கருதி முன்னெடுக்கின்ற ஒரு திட்டமாக அவற்றை செயற்படுத்த முன்வர வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X