Editorial / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்
புப்புரஸ்ஸ, டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தில் தமக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் தமது பணிகளைப் புறக்கணித்து கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' புயல் மற்றும் கடும் மண்சரிவு காரணமாக, புப்புரஸ்ஸ பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன. குறிப்பாக, டேசன் தோட்டத்தைச் சேர்ந்த 22 குடும்பங்கள் கடந்த சில மாதங்களாகப் பாடசாலைகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
தமக்கான நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு நீண்டகாலமாக இவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இக்குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்காமல், புப்புரஸ்ஸ பகுதியிலுள்ள வேறு 15 குடும்பங்களுக்கு டேசன் தோட்ட அரச காணிகளை ஒதுக்கி வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் முற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அறிந்த தோட்டத் தொழிலாளர்கள், புதன்கிழமை (29) அன்று தமது பணிகளை இடைநிறுத்தி தேயிலை மலைகளிலிருந்து கீழிறங்கி ஒன்று கூடினர். தமக்கும் வீடுகளை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சில மணிநேரம் நீடித்த இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் பணிகளுக்குத் திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து இலங்கை சுதந்திர மலையக தொழிற்சங்கத்தின் செயலாளரும், உடபளாத்த பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் கவாஸ்கர் கருத்துத் தெரிவிக்கையில்:
"பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களுக்கு இங்கே வீடமைக்கப்படுவது தோட்ட மக்களைப் பாரபட்சமாக நடத்தும் செயலாகும்."
மேலும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் பாரபட்சமாகச் செயற்படுவதாகவும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட இந்தத் தோட்ட மக்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்குமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
17 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026