2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

“பிரதமரின் அனுமதியுடன் 3000 பேருக்கு ஆசிரியர் நியமனம்”

Yuganthini   / 2017 ஜூன் 18 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு, திறமையான ஆசிரியர்கள் 3,000 பேரை உள்வாங்குவதற்கான அனுமதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளதாக தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இது தொடர்பிலான பேச்சுவார்த்தை, எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன். இதன்போது, மலையகக் கல்வி அபிவிருத்தி எந்த நிலையில் உள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நான், மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே, பெரும் பிரச்சினையாகவுள்ளதாக தெரிவித்தேன். இது தொடர்பில் கலந்துரையாடி, ஆசியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அவர் அதிகாரிகளுக்கு பணித்தார்.

இதற்கமைவாக, எதிர்வரும் 28 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலினூடாக, ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்தமுறை ஆசிரியர்களை உள்வாங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விடப்பட்ட தவறுகள் இம்முறை தவிர்க்கப்படும். உதாரணமாக கடந்த முறை 10 வருட பதிவு கோரப்பட்டது. இம்முறை, அதனை ஐந்து வருடங்களாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் என்று குறிப்பிட்ட காரணத்தினால், நகர்புறங்களைச் சேர்ந்த  திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே,  இவ்வாறான விடயங்கள் நீக்கப்படும். நகர்புறங்களை அண்டி வாழ்கின்றவர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களே. எனவே, அவர்களையும் உள்வாங்குவதற்கு ஏற்ற வகையில் பாடசாலைகளை மையப்படுத்தியதாக, இந்த நியமனங்கள் அமையும்.

பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு தகுதிப் பெற்றும், வறுமை போன்ற காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள், பல்கலைக்கழங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை 1,2 புள்ளிகளால் தவறவிட்டவர்கள், கல்வியல் கல்லூரிக்கு செல்வதற்கான அனுமதிக் கிடைத்தும் முறையான ஆவணங்கள் இன்மையால் அந்த வாய்ப்பை இழந்தவர்களுக்கு, இந்த ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .