2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பூசாரி பிரிவில் மனித எச்சங்கள்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ - சீனாகொல பூசாரி பிரிவு பகுதியிலுள்ள 2ஆம் இலக்க தேயிலை மலையில், நேற்று  (18) மீட்கப்பட்ட மனித எச்சங்களை, கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சீவ பொன்சேகாவின் பணிப்புரைக்கமைவே, இந்த மனித எச்சங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

​மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்துக்கு, ஹட்டன் தடையவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

தற்போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில், தேயிலை மலையில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண்ணொருவர், அலைபேசியொன்றைக் கண்டெடுத்துள்ளார். அந்த அலைபேசியை, தன்னுடைய மகனுக்கு கொடுத்துள்ளார். மகன், வேறொரு சிம் அட்டை, அந்த அலைபேசிக்கு மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பொகவந்தலாவ -  கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான, பெருமாள் செல்வம் என்ற நபர், காணாமல் போயிருந்தார் என, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவருக்கு, நீதிமன்றத்தால் ஏற்கெனவே பிடிவிறாந்து விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் காணாமல் போயுள்ளார்.

எனினும், இவரைத் தேடி சமீபத்தில் பொலிஸார் வீட்டுக்கு வந்துள்ளனர். எனினும், தன்னுடைய கணவர் கடந்த 9 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை என்றும் அவர் காணாமல் போய்விட்டார் என்றும், காணாமல் போன நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இ​தையடுத்து, காணாமல் ​போன நபர் பயன்படுத்தி வரும் அலைபேசியின் பெட்டியை, பொலிஸார் கேட்டுள்ளனர். இதையடுத்து, அலைபேசிப் பெட்டியில் இருந்த IMEI இலக்கத்தை வைத்து, குறித்த அலைபேசி எந்த இடத்தில் செயற்படுகின்றது என்பது தொடர்பில், பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, அலைபேசி பயன்படுத்தி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, அந்த அலைபேசி கிடைத்த இடத்தில் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே, இந்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், பற்கள், கை எலும்பு, மண்டையோடு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், காணாமல் போன நபர் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், மனித எச்சங்களாக மீட்கப்பட்டது ​பெருமாள் செல்வம் தானா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் மனித எச்சங்கள் தொடர்பான அறிக்கை வந்த பின்னரே, இது குறித்து தெரியவரும் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .