2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’மலையகத்துக்கு தனியான பல்கலைக்கழகம் அவசியம்’

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

மலையகத்தைச் சேர்ந்த 506 மாணவர்கள், கடந்தாண்டில் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெற்றுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டிய மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகரான எம்.வாமதேவன், இது மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

கொழும்பு நன்னம்பிக்கை கல்வி நிதியம் சார்பில், பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வசதி குறைந்த மலையக மாணவர்கள் 25 பேருக்கு, புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, ஹட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில், அதன் தலைவர் எஸ்.சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

இதில் மேற்படி நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் டி.தனராஜ், பொருளாளர் சட்டத்தரணி எஸ்.தாயுமானவன், ஹட்டன் பிரதேச இணைப்பாளரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான கே.மெய்யநாதன் ஆகியோரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், “1965 இல், முதன்முறையாக மாத்தளையிலிருந்து மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அதே காலப் பகுதியில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள். 52 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையகத்திலிருந்து இன்று 506 பேர், பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளார்கள்” என்று அவர் பெருமிதம்கொண்டார்.

2017ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 29ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ள நிலையில், தேசிய ரீதியில் மலையகம் 1.5 சதவீத அனுமதியைப் பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவர்களில் 115 பேர் ஒரே வருடத்தில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலிருந்து தெரிவாகியுள்ளார்கள் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என்றும் தெரிவித்தார்.

ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125 வருட கால வரலாற்றில், இது பெரும் சாதனையாகும் என்று குறிப்பிட்ட அவர், நுவரெலியா மாவட்டத்திலிருந்து மொத்தமாக 268 பேர் அனுமதி பெற்றுள்ளார்கள் என்றும், இவ்வாறு வருடந்தோறும் மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி அதிகரித்து வருகின்றமை, மலையகத்துக்குத் தனியான பல்கலைக்கழகம் தேவை என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

“இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் பல மாணவர்கள், தமது பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் வேறு வேலைவாய்ப்புகளை நாடிச் சென்று விடுகின்றார்கள். அதை நிவர்த்தி செய்து, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவும் வகையில், நன்னம்பிக்கை கல்வி நிதியம் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .