2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலையகத் தமிழர்களை “கொச்சைப்படுத்த இடமளிக்க முடியாது”

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'மலையகத் தமிழர்களை கொச்சைப்படுத்த நாம் இடமளிக்க போவதில்லை. எமது போராட்டக் குணம், அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நாங்கள் இந்த நாட்டில் முதுகெலும்பாக இருந்து செயற்பட்டவர்கள். எமது, தேயிலைத்துறை, நாட்டுக்கு வருமானங்களை ஈட்டித்தந்தத்துக்கொண்டிருக்கும் ஒரு துறை என்பதை ஒருவரும் மறந்துவிடக்கூடாது. எனவே, எம்மை கொச்சைப்படுத்துவதை நிறுத்தி, எவ்வாறு ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதை சிந்தித்து செயற்பட்டால், அது எமது எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“சமூக அந்தஸ்த்துக்காகவே, மலையகத் தமிழர்கள் ஈழப்போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என கிளிநொச்சி, கரைச்சி பிரதேச கலாசார விழாவில் வெளியிடப்படவிருந்த “கரை எழில்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்து மலையகத் தமிழர்களை அவமதிக்கும் செயற்பாடு. இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை” என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச கலாசார விழாவில் வருடாந்தம் வெளியிடப்படும் “கரை எழில்” நூலில் இம்முறை, வன்னியில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையிலான கருத்துகள் அடங்கிய கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரைக்கு பலமுனைகளில் எதிர்ப்புகள் வந்ததால் அந்நூல் வெளியிடப்படவில்லை.

இக்கட்டுரைக்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர், மேலும் கூறியுள்ளதாவது,

“மேற்படி நூலில், மலையக மக்கள், தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள் என்றும் வன்னியில் வாழ்ந்துவரும் மலையகப் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இதேவேளை, வன்னியில் வாழ்ந்து வரும் மலையக இளைஞர்,யுவதிகள் ஈழபோராட்டத்தில் தேசப்பற்றுக்காக அல்லாமல் கௌரவத்துக்காக மட்டுமே இணைந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன், ஈழப்போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு வழங்கியதற்காக, பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். இது யாவரும் அறிந்ததே. அதனை அன்றைய ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அதன் தலைமையும் ஏற்றுக் கொண்டது. அது மட்டுமல்லாமல், ஈழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள், மலையகத் தமிழர்கள் என்ற ஒரு குறிப்பும் உள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இந்தக் கட்டுரையை எழுதியவர் என்ன நோக்கத்துக்காக இவ்வாறான கருத்துகளை குறிப்பிட்டுள்ளார் என்று புரியவில்லை.

மலையகத் தமிழர்களுக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கும் ஓர் உறவுப்பாலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில், எமது மலையகத் தமிழர்களை கொச்சைப்படுத்துவதைப் போன்று கட்டுரைகைகளை வெளியிடுவது, மிகவும் வருத்தத்துக்குறியதாகும்.

நாங்கள் இலங்கையில் எங்கு வாழ்ந்தாலும் மொழியாலும் இனத்தாலும் ஒன்றுபட்டவர்கள். அதற்கு அடுத்த விடயமே நமது பிரதேசம். வடக்கு,கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக நின்று செயற்பாட்டல் மட்டுமே, எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நான், இன்று மத்திய அரசாங்கத்தில் இராஜாங்க கல்வி அமைச்சராக பணியாற்றி வருகின்றேன். நான், மலையகத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவன். ஆனால், நான் எனது செயற்பாடுகளை மலையகத்துக்கு மட்டுமென மட்டுப்படுத்தவில்லை. இலங்கையில் எமது தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று, என்னுடைய சேவைகளை செய்து வருகின்றேன். முஸ்லிம் மக்களும் தமிழர்களே என்ற சிந்தனையில், அவர்களுக்காகவும் நான் சேவைகளை செய்கின்றேன்.

என்னுடைய இந்த சேவைகளை பார்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், என்னை பல மேடைகளில் புகழ்ந்துள்ளனர்.

நான், அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்து செயற்பட்டு வருகின்றேன் என்று, த.தே.கூவின் உறுப்பினர்களுக்கு புரியும். பிரதேசவாதம் பேசுவதால் எதனையும் சாதித்துவிட முடியாது. எனவே, ஒற்றுமையாக இருந்து செயற்படுவோம்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .