2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மஹர சிறைச்சாலை கைதிகளை தாக்கியமைக்கு கண்டனம்

Gavitha   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மஹர சிறைச்சாலை கைதிகள் மீதான, மிலேச்சத்தனமாக தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பாக, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்தரன், இன்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலில், சிறைச்சாலை கைதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கு பிணை வழங்குமாறும் வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறும், அடிப்படை வசதிகளை அதிகரிக்குமாறும், பிசிஆர் பரிசோதிக்குமாறும், தொற்றுக்குள்ளான கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும் கோரியே, கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கும் கைதிகள் மீது தாக்குதல் நடத்துவது, அரசாங்கத்தின் எதேச்சதிகார போக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், நாட்டில் சாதாரண மக்களின் கருத்து உரிமை நசுக்கப்பட்டு வருகின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், நீதி கோரும் மக்கள் மீதும் மக்கள் செயற்பாட்டாளர்கள் மீதும் அதிகாரத்தையும் ஆயுத பலத்தையும் தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றது என்றும் தெரிவித்தார்

“கடந்த காலங்களில், மில்லியன்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் அரச சொத்துக்களை திருடியவர்கள் வரிசையாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மறுபுறத்தில் சிறு சிறு குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படுள்ளோருக்கு,  நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அராஜகம் பிரயோகிக்கப்படுகின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற  மமதையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் சிறைகைதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரள வேண்டும் என்று அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X