2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘யாரிடமும் மண்டியிடமாட்டோம்’

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மீண்டும் வைக்குமாறு, யாரிடமும் மண்டியிட்டுக் கேட்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. மலையக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இதுவரை இலங்கையில் மாறி,மாறி ஆட்சியமைத்த அரசாங்கங்கள் அதனை நன்கு உணர்ந்துள்ளன. அதனாலேயே, பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக அவருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது” என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.

“பெயர் மாற்றிய விடயத்தில் அரசாங்கமே நல்லதொரு தீர்வை முன்வைக்க வேண்டும். அதற்காக நாங்கள் யாரிடமும் மண்டியிட மாட்டோம். இவ்விடயத்தில் நல்லத்தீர்வுக் கிடைக்கவில்லை எனில், அமைதியின்மை ஏற்படும். இது, அபிவிருத்திக்கு நல்லதல்ல” என்றும் அவர் கூறினார்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெயர் மாற்றப்பட்ட விடயத்தில், நல்லாட்சி அரசாங்கத்துக்கும் பொறுப்பு உண்டு. அமைச்சரவையின் அனுமதியுடனேயே பெயர் மாற்றப்பட்டதாக, அமைச்சர் திகாம்பரமும் கூறியுள்ளார். எனவே, இவ்விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமும் உடந்தையாக இருந்துள்ளது.

“மக்கள் பணி செய்வதற்காக ஆட்சிபீடமேறியவர்கள், மக்களுக்கான அபிபிவிருத்தியை மட்டும் செய்தால், அது, அவர்களது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு நல்லதாக அமையும். இல்லையெனில், எதிர்கால அரசியல் வாழ்க்கை சூன்யமாக மாறிவிடும். இதனை அமைச்சர் திகாம்பரமும் உணர்ந்துகொண்டால் சரி.

“இலங்கையில் பல பெருந்தலைவர்களின் பெயர்கள் விமான நிலையங்களுக்கும் விளையாட்டுத்திடல்களுக்கும் வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், அத்தகைய பெருந்தலைவர்களின் பெயர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, அமரர் செயமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மட்டும் மாற்றுவதற்கு ஏன் முயல்கின்றனர்.

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையகத்தின் தேசபிதா. அவர், மலையக மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக குரல்கொடுத்தவர். மலையக மக்கள், இன்று நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானே வழிவகுத்துக் கொடுத்தார். அத்தகைய பெருந்தலைவரின் பெயரே இன்று இல்லாமற் செய்யப்பட்டுள்ளது.

இதனை உணர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .