2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ரணிலின் கூட்டுச் சதியே பாதயாத்திரை

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கத்தை குழப்பி தனி ஆட்சையை நிலைநாட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் பாதயாத்திரைக்கு ரணிலின் பின்னூட்டலே காரணமனெவும் அக்கட்சி கூறியுள்ளது.

'பாத யாத்திரையை வாகன யாத்திரையாக கொண்டுச் சென்றாலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்' என வடமத்திய மாகாண சபை உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

'கடன் சுமை, வரிச்சுமை மற்றும் வீழ்ச்சியடையும் பொருளாதாரம்' என்ற தொனிப்பொருளில் மஸ்கெலியா கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற  விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“உரிமைகள் மற்றும் சுந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர். இருந்தும் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த கூட்டாட்சி அரசாங்கமும் மக்களுக்கு துரோகமிழைத்து வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி தனி ஆட்சி ஒன்றுக்கான விதையை போடுவதற்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுகின்றார். இதற்காக அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை முக்கிய துரும்புகளாக பயன்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு பிரதமர் செவி சாய்த்து வந்தாலும், ஜனாதிபதியின் கடமைகளையே பிரதமர் மேற்கொண்டு வருகின்றார். இருந்தாலும், நிலையான தனி அரசு இல்லாமல் ஜனாதிபதியால் இயங்க முடியாது என்பதை தெரிந்துக்கொண்டு பிரதமர் ரணில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றார். 

நாட்டில் நீதியை சுதந்திரமாக செயற்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு சுதந்திரத்தை வழங்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இது எந்தவகையில் நியாயம்' என அவர் கேள்வி எழுப்பினார்.

'பாதயாத்திரை என்பது நடந்து செல்ல வேண்டிய ஒன்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது 70 வயதாகின்றது. ஒன்றிணைந்த எதரிணியினர் முன்னெடுத்து வரும் பாதயாத்திரையில் எம்.பி.மஹிந்த ராபக்ஷவால் நடந்துச் செல்ல முடியுமா? அல்லது அவர் வாகனத்தில் யாத்திரை செல்கின்றாரா?'

'அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு சட்டத்தை நிலைநாட்ட தடுமாறி வருகின்றார்கள். தனி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்காக கூட்டாட்சி அரசாங்கத்தை உடைத்து பலத்தை பெறுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாத யாத்திரையை வாகன யாத்திரையாக கொண்டுச்சென்றாலும் மூன்றில் இரண்டு பலம் இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .