Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
"லயன் என்ற கட்டமைப்புக்குள்தான் பெருந்தோட்ட மக்கள் வாழ வேண்டும். அவர்கள் வாழும் பகுதிக்கு 'கிராமம்' என்ற அங்கிகாரத்தை வழங்கக்கூடாது என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கேற்ற வகையிலேயே, புதிய அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது எம்மக்களை மீண்டும் இருண்ட யுகத்துக்கே அழைத்துச்செல்லும்" என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர், தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றும் இப்பத்திரத்தில் நயவஞ்சகமான ஏற்பாடுகள் இருந்தாலும், அது பற்றி கதைக்காமல், '10 பேர்ச்சஸ் காணி' என்ற ஒன்றை மட்டும் தூக்கிப்பிடித்து, ஆளுங்கட்சிக்கு காவடி தூக்கும் நடவடிக்கையில் அரச பங்காளிகளும், அவர்களின் அடியாட்களும் ஈடுபட்டுள்ளனர் என்றும் சாடினார்.
'இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு கவலையில்லை. எமது ஆட்சியில் லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
'பாதுகாப்பான இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டன. தோட்டங்கள் கிராமங்களாக பரிணாமம் பெற்றன. அதுமட்டுமல்ல வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட காணிக்கு அப்பால் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் வீதம் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவந்தன.
எனவே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைவிடுத்து, மாற்றம் என்ற போர்வையில், எமது மக்களை அதே லயன் யுகத்துக்குள் வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று சாடினார்.
'தற்போது உள்ள லயன்கள் இடிக்கப்பட்டு அங்குதான் வீடுகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு லயன் அறை கட்டுவதற்கு ஒரு பேர்ச்சஸ் காணிகூட இல்லை. எனவே, லயன்களை இடித்துக்கட்டினால் எவ்வாறு 10 பேர்ச்சஸ் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகும்?
'அதேபோல் லயன் என்ற கட்டமைப்புக்குள் இடைவெளியின்மை, வீதி வசதி இன்மை என பல பிரச்சினைகள் இருந்தன. ஆக தனி வீடுகள் அமைக்கப்பட்டாலும் அதே பிரச்சினைகள் தொடரும் வகையில்தான் திட்டம் அமைந்துள்ளது.
'தோட்டத் தொழிலாளர்களின் சுயதொழிலை ஊக்குவிப்பதற்கும் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கும் தலா 2 ஏக்கர் வீதம் வழங்குவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
'தற்போது அதுவும் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கு 7 பேர்ச்சஸ் காணி, எஞ்சிய 3 பேர்ச்சஸ் காணியில் சுயதொழில் என அறிவித்துள்ளதன்மூலம் குறுகிய வட்டத்துக்குள் மக்களை சிறை வைப்பதற்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
'அரசின் இந்த நயவஞ்சகத் திட்டம் தெரியாமல், ஏதோ வரலாற்றை மாற்றியமைத்துவிட்டதைபோல் சிலர் வீராப்புப் பேசுகின்றனர். இருந்ததும், இல்லாமல்போகப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். எனவே, எமது மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுப்போம' என்றார்.
28 minute ago
36 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
57 minute ago